/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நுகர்வோரின் கோடிக்கணக்கான பணம் நுாதனமாக திருடும் குடிநீர் வாரியம்
/
நுகர்வோரின் கோடிக்கணக்கான பணம் நுாதனமாக திருடும் குடிநீர் வாரியம்
நுகர்வோரின் கோடிக்கணக்கான பணம் நுாதனமாக திருடும் குடிநீர் வாரியம்
நுகர்வோரின் கோடிக்கணக்கான பணம் நுாதனமாக திருடும் குடிநீர் வாரியம்
ADDED : நவ 04, 2024 04:58 AM
நுகர்வோரிடம் கூடுதலாக வசூலிக்கும் சில்லறை காசுகளால் மட்டும் சென்னை குடிநீர் வாரியத்திற்கு ஓராண்டுக்கு ஒரு கோடி ரூபாய் கிடைக்கிறது.
சென்னையில், 16.80 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. இதற்கு, 13.85 லட்சம் பேர் வரி மற்றும் 9.27 லட்சம் பேர் கட்டணம் செலுத்துகின்றனர். குடிநீர் இணைப்பு வழங்காத விரிவாக்க பகுதிகளில், வரி மட்டும் செலுத்தப்படுகிறது.
மாநகராட்சி நிர்ணயிக்கும் கட்டடத்தின் ஆண்டு மதிப்பில், 7 சதவீதம் குடிநீர், கழிவுநீர் வரி செலுத்த வேண்டும். இதை, ஒரு நிதியாண்டில் ஆறு மாதம் வீதம் கணக்கிட்டு, 3.5 சதவீதத்தில் வரி வசூலிக்கப்படுகிறது.
அதன்படி, வரி, கட்டணம், லாரி குடிநீர் மற்றும் நிலுவை என, ஆண்டுக்கு நிலுவை சேர்த்து 1,315 கோடி ரூபாய் வசூலாக வேண்டும். ஆனால், 1,110 கோடி ரூபாய் வசூலாகிறது.
குடிநீர் கட்டணத்திற்கு, வீடு மற்றும் பகுதி வணிகத்திற்கு, ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீதம் மற்றும் முழு வணிகத்திற்கு 10 சதவீதம் கூடுதலாக வசூலிக்க, 2022ம் ஆண்டு வாரியம் முடிவு செய்தது.
இதன்படி, ஒரு வீட்டுக்கு குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணமாக குறைந்தபட்சம் மாதம், 80 ரூபாய் வசூலிக்கப்பட்டது. பின், 2023 - -24 நிதியாண்டில், 5 சதவீதம் அதிகரித்து, 84 ரூபாய் வசூலிக்கப்பட்டது.
நடப்பு, 2024 - -25ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில், 84 ரூபாயில் 5 சதவீதம் கூடுதல் கட்டணமாக, 88.20 ரூபாய் வசூலிக்க வேண்டும். இதில், 20 காசு சில்லரையாக வருகிறது. பொதுவாக, 49 காசு வரை வந்தால், 88 ரூபாய் என கணக்கிட வேண்டும். அதுவே, 50 காசுகளுக்கு மேல் வந்தால், 89 ரூபாய் என கணக்கிட வேண்டும்.
ஆனால், வாரியத்தில் எவ்வளவு சில்லறை காசு வந்தாலும், அடுத்த இலக்கு ஒரு ரூபாயாக வசூலிக்கப்பட்டது.
இதன்படி, மாதம் 88.20 ரூபாய் வீதம், ஆறு மாதங்களுக்கு 529.20 ரூபாய் வசூலிக்க வேண்டும். ஆனால், இதற்கு பதிலாக 89 ரூபாய் வீதம், ஆறு மாதத்திற்கு 534 ரூபாய் வசூலிக்கப்பட்டது.
இதன்படி, ஒரு நுகர்வோரிடம் இருந்து, 5 சதவீதத்திற்கு பதில், 5.95 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப்பட்டது.
அதேபோல், கழிவுநீர் கட்டணம் மட்டும் செலுத்தும் நுகர்வோரிடம் இருந்தும், நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஒவ்வொரு நுகர்வோரிடம் இருந்தும், ஆறு மாதங்களுக்கு 5 முதல் 6 ரூபாய் வரை, அரசு நிர்ணயித்ததை விட அதிகமாக வசூலிக்கப்படுகிறது
மொத்தமுள்ள, 9.27 லட்சம் நுகர்வோரிடம், ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வரை அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 80 ரூபாய் கட்டணத்தை, 100 ரூபாயாக உயர்த்தி, கடந்த செப்., 27ம் தேதி, குடிநீர் வாரியம் உத்தரவு பிறப்பித்தது. இது, அக்., 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
அடுத்த, 2025 - 26 நிதியாண்டில், ஏப்., 1ம் தேதி முதல், 5 சதவீதம் உயர்த்தப்படும் என, அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதிலும், சில்லரை காசு வித்தியாசம் வரும். இதற்கு எப்படி வசூலிக்க வேண்டும் என, வாரியம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
'குடிநீர் வாரியம் சில்லரை காசை முறையாக கணக்கிடாமல், அதை எங்கள் தலையில் துாக்கி வைப்பது எந்தவிதத்தில் நியாயம்' என, நுகர்வோர் கேள்வி எழுப்புகின்றனர். தலைமை செயலர் தலையிட்டு, சில்லரை காசு வசூலிப்பதில், அதிகாரிகள் காட்டும் மெத்தனத்தை போக்கி, நுகர்வோருக்கு நல்ல தீர்வு வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
கட்டணத்தில் 5 சதவீதம் உயர்த்திய பின் தான், சில்லரை காசு பிரச்னை வருகிறது. இதை, நிதி கையாளும் பிரிவு, கணினியில் முறைப்படுத்த வேண்டும். வசூல் மைய ஊழியர்களிடம், பொதுமக்கள் தினமும் கேள்வி கேட்கின்றனர். பதில் கூற முடியவில்லை. மேலாண்மை இயக்குனர் தான், இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
- குடிநீர் வாரிய அதிகாரிகள்
- நமது நிருபர் -