ADDED : ஆக 31, 2026 06:31 PM
புல்லரம்பாக்கம்: புல்லரம்பாக்கம் அருகே சாலை மையத்தடுப்பில் லாரி மோதி விபத்திற்குள்ளானதில், சம்பவ இடத்திலேயே ஓட்டுநர் ராமு, 47, பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு கண்டிகையில், நேற்று காலை 7:30 மணியளவில் நெடுஞ்சாலை மையத்தடுப்பில் கன்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில், சம்பவ இடத்திலேயே லாரி ஓட்டுநர் உயிரிழந்தார்.
தகவலறிந்த புல்லரம்பாக்கம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
விபத்தில் உயிரிழந்த லாரி ஓட்டுநர் கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கத்தைச் சேர்ந்த ராமு, 47. இவருக்கு மனைவி மற்றும் இரு பிள்ளைகள் உள்ளனர்.
இவர், நேற்று காலை ஆந்திர மாநிலம் தடா பகுதியில் இருந்து, திருவள்ளூர் மாவட்டம் பாப்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு, கண்டெய்னர் லாரியில் எண்ணெய் ஏற்றி வந்துள்ளார். வரும் வழியில் விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.
முதற்கட்ட விசாரணையில், லாரி ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரிய வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
