/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெற்களமான நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
/
நெற்களமான நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
UPDATED : மார் 17, 2025 01:55 AM
ADDED : மார் 17, 2025 01:41 AM

பள்ளிப்பட்டு,:ஆர்.கே.பேட்டையில் இருந்து பள்ளிப்பட்டுக்கு,
அத்திமாஞ்சேரிபேட்டை மார்க்கமாக மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இதில்,
ராஜாநகரம் ஏரிக்கரை மீது இச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை, வேலுாரில் இருந்து ஆர்.கே.பேட்டை வழியாக திருப்பதிக்கு, இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இதில், ஏரிக்கரை சாலையில் உள்ள வளைவுகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
கடந்த
2010ல், ஆந்திராவில் இருந்து லாரியில் இவ்வழியாக வந்த திருமண வீட்டார்,
லாரியுடன் ஏரியில் கவிழ்ந்து விபத்தில் சிக்கினர். இரண்டு ஆண்டுகளுக்கு
முன், இதே ஏரிக்கரை சாலையில் இருந்து விலகிய சரக்கு ஆட்டோ, கரையோரத்தில்
உள்ள விவசாய கிணற்றில் விழுந்து மூழ்கியது.
இந்நிலையில், இந்த
சாலையில் சிலர், நெல் உள்ளிட்ட தானியங்களை வெயிலில் உலர வைத்து
வருகின்றனர். சாலையின் ஒரு பகுதி முழுதுமாக தானியங்களை பரப்பி வைத்து உலர
வைப்பதால், விபத்து அபாயம் நிலவுகிறது.
எனவே, வாகன ஓட்டிகளின் நலன்
கருதி, சாலையில் தானியம் உலர வைப்பதை தடுக்க, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள்
அறிவுறுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.