ADDED : மார் 02, 2026 05:05 AM
பொன்னேரி: சட்டசபை தேர்தலுக்கு போட்டியிட ஆர்வம் காட்டும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள், தங்கள் அன்றாட நிகழ்வுகளை, 'ரீல்ஸ்' எடுத்து, சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேதி, இம்மாதம் அறிவிக்கப்பட உள்ளது. பொன்னேரி தொகுதியில் போட்டியிட விரும்பும் தி.மு.க., கூட்டணி, அ.தி.மு.க., கூட்டணி மற்றும் த.வெ.க., சார்பில் போட்டியிட அக்கட்சியினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஒவ்வொரு கட்சியிலும், 2 - 5 பேர் வரை போட்டியிடுவதற்கு தலைமையிடம் வேட்புமனு கொடுத்து ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
இதற்காக, தினமும் மக்களை சந்திப்பது, கட்சி நிர்வாகிகள் இடையே கலந்துரையாடுவது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது என, ஒரு மாதமாக பிசியாக சுற்றி வருகின்றனர்.
ஒவ்வொரு நிகழ்வையும் வீடியோவாக எடுத்து, அதற்கு ஏற்ற சினிமா பாடல்களுடன் இணைத்து, 'ரீல்ஸ்' ஆக மாற்றி சமூக வலைதளங்களில் தங்களது இருப்பை காட்டி வருகின்றனர்.
இதற்காக போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள், தனியாக சமூக வலைதளங்களை கையாளும் நபர்களை உடன் வைத்து சுற்றி வருகின்றனர். வேட்பாளர் அறிவிப்பு வரும் வரை அரசியல் கட்சியினரிடம், 'ரீல்ஸ்' மோகம் குறையாது என, பொதுமக்கள் நகைப்புடன் கூறி வருகின்றனர்.
