விரைவு ரயில் இன்ஜின் பழுது: ஒரு மணி நேரம் சேவை பாதிப்பு
விரைவு ரயில் இன்ஜின் பழுது: ஒரு மணி நேரம் சேவை பாதிப்பு
ADDED : ஜன 04, 2026 04:51 AM
பொன்னேரி: சென்னை சென்ட்ரல் - சரளப்பள்ளி செல்லும் ஹைதராபாத் விரைவு ரயிலின் இன்ஜின் பழுதாகி பொன்னேரியில் நின்றதால், ஒரு மணி நேரம் சேவை பாதித்து, பயணியர் சிரமத்திற்கு ஆளாகினர்.
சென்னை சென்ட்ரலில் இருந்து, நேற்று மாலை 4:45 மணிக்கு, ஆந்திர மாநிலம் சரளப்பள்ளிக்கு புறப்பட்ட ஹைதராபாத் விரைவு ரயில், சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் பயணித்தது.
மாலை 5:45 மணிக்கு, இந்த மார்க்கத்தில், கும்மிடிப்பூண்டி அருகே அனுப்பம்பட்டு ரயில் நிலையத்தை கடக்கும்போது இன்ஜின் பழுதாகி நடுவழியில் நின்றது. இதனால், அடுத்தடுத்து வந்த புறநகர் ரயில்கள், கிராண்ட்ரங் விரைவு ரயில் ஆகியவை, ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
தகவலறிந்த ரயில்வே பராமரிப்பு நிர்வாகம், மாற்று இன்ஜினை எடுத்துச் சென்று, பழுதாகி நின்ற விரைவு ரயிலுடன் இணைத்து, பொன்னேரி ரயில் நிலையத்திற்கு இழுத்து செல்லப்பட்டது.
இந்த ரயில் இன்ஜின், இரண்டாவது நடைமேடையில் நிறுத்தப்பட்டு, பழுதை சரிசெய்யும் பணி நடந்தது. இதனால் புறநகர் ரயில்கள் மற்றும் விரைவு ரயில் தாமதமாக இயக்கப்பட்டன.
சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில், ஒரு மணி நேரம் ரயில் சேவை பாதித்தது. ரயில் பயணியர் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இன்ஜின் பழுது சரிசெய்யப்பட்டு, இரவு 7:30 மணிக்கு, ஹைதராபாத் ரயில் சேவை துவங்கியது.
