பழவேற்காடு ஏரியில் படகு சவாரி செல்லும் பயணியருக்கு... பேராபத்து:கண்காணிப்பு இல்லாததால் தடையை மீறும் படகோட்டிகள்
பழவேற்காடு ஏரியில் படகு சவாரி செல்லும் பயணியருக்கு... பேராபத்து:கண்காணிப்பு இல்லாததால் தடையை மீறும் படகோட்டிகள்
UPDATED : ஜூன் 14, 2026 11:12 PM
ADDED : ஜூன் 14, 2026 10:22 PM

பழவேற்காடு:பழவேற்காடு ஏரியில், அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாததால், சுற்றுலா பயணியர் தடையை மீறி படகு சவாரி அழைத்து செல்லப்படுகின்றனர். எவ்வித பாதுகாப்பும் இன்றி, பேராபத்துடன் படகு சவாரி செய்யும் செய்யும் பயணியர், அசம்பாவிதங்களில் சிக்கும் அபாயம் உள்ளதாக, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஏரியானது, ஆந்திர மாநிலம் வரை இருக்கிறது. ஏரியில், தமிழகம், ஆந்திர மாநிலங்களை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட கிராமங்கள், மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த ஏரியில் படகு சவாரி செல்வதற்கு, சுற்றுலா பயணியர் அதிகம் விரும்புவர். இந்நிலையில், கடந்த 2011ல், சுற்றுலா பயணியர் 22 பேர், படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், ஏரி நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த கோர விபத்தை தொடர்ந்து, பழவேற்காடு ஏரியில் படகு சவாரி செல்ல, மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
சில காலம் இந்த தடை பின்பற்றப்பட்டது. அதன்பின் அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாத நிலையில், தடையை மீறி படகு சவாரி செல்வதும், அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர்கிறது.
காணும் பொங்கல், ஆங்கில புத்தாண்டு தினங்களில் மட்டும், காவல் துறையினர் படகு சவாரி நடைபெறாமல் கண்காணிக்கின்றனர். முன்கூட்டியே படகோட்டிகளுக்கும், மீனவ கிராமங்களுக்கும் அறிவிப்பாணை மூலம் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
மற்ற நாட்களில், இது குறித்து எந்தவொரு கண்காணிப்பு நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால், சனி, ஞாயிறு உள்ளிட்ட வார விடுமுறை நாட்களில், தடையை மீறி படகு சவாரி ஜோராக நடக்கிறது.
பழவேற்காடு ஏரிக்குள் நுழையும் போதே, சுற்றுலா பயணியரை அங்குள்ள படகோட்டிகள் படகு சவாரிக்கு கூவிக்கூவி அழைக்கின்றனர்.
பாதுகாப்பு கவசம் உட்பட எந்தவொரு உபகரணங்களும் இல்லாமல், ஆபத்தான முறையில் சுற்றுலா பயணியர் படகு சவாரிக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.
பாதுகாப்பு கவசமின்றி செல்லும் சுற்றுலா பயணியர், எதிர்நோக்கியிருக்கும் பேராபத்தை உணராமல், படகுகளில் நின்றபடி 'செல்பி' எடுப்பது, அரட்டை அடிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதால், ஏரியில் தவறி விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஏரியின் தீவுப்பகுதிகள், கடலும் ஏரியும் இணையும் முகத்துவார பகுதிகளில் சுற்றுலா பயணியர் இறக்கிவிடப்பட்டு, குறிப்பிட்ட நேரத்திற்கு பின், திரும்ப பழவேற்காடு கரைக்கு அழைத்து வரப்படுகின்றனர். இதற்காக, 1,200 - 1,500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.
மேலும், இளைஞர், இளாம்பெண்கள் கூட்டம், சனிக்கிழமை மாலை சென்று, இரவு முழுதும் தீவுப்பகுதிகளில் தங்கி ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என குதுகலித்து விட்டு, அடுத்த நாள் கரை திரும்புகின்றனர். இதனால், விரும்பதகாத சம்பவங்கள் நேரிடும் அபாயமும் உள்ளது.
பாதுகாப்பற்ற முறையில் படகு சவாரி செல்லும் சுற்றுலா பயணியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதால், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
அரசின் கண்காணிப்பு இல்லாததால், தடையை மீறி படகு சவாரி தொடர்கிறது. உரிய பாதுகாப்பு வழிமுறைகளை வரையறுத்து, சுற்றுலா துறையே முறைப்படுத்தப்பட்ட படகு சவாரியை நடத்த முன்வரலாம்.
அதே சமயம், மீனவர்களின் மீன்பிடி தொழிலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அவர்களது ஆலோசனைகளையும் பெற்று செயல்படுத்தலாம்.
அதுவரை, அசம்பாவிதங்கள் ஏற்பட்டு, அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க, தடையை மீறி படகு சவாரி நடைபெறுவதை தடுக்க வேண்டும். தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
