/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கலெக்டரை மிரட்டிய போலி நிருபர் கைது
/
கலெக்டரை மிரட்டிய போலி நிருபர் கைது
ADDED : பிப் 17, 2024 11:37 PM

திருவள்ளூர், திருவள்ளூர் அடுத்த, காக்களூரைச் சேர்ந்தவர் நந்தகோபால். இவரது மனைவி அஞ்சலாட்சி, 58. இவருக்கு சொந்தமான 3,840 சதுரஅடி இடத்தை, 2014ல், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலைக்காக அரசு கையகப்படுத்தி, அன்றைய சந்தை மதிப்பில் 10 லட்சம் ரூபாய் வழங்கியது.
இந்நிலையில், தான் வழங்கிய நிலத்திற்கு கூடுதல் பணம் கேட்டு, கலெக்டர் அலுவலகத்தில் அஞ்சலாட்சி மனு அளித்துள்ளார். மனு மீதான விசாரணை, நேற்று முன்தினம் நடந்தது.
அஞ்சலாட்சி, தன்னுடன் காக்களூர் வீராசாமி நகரைச் சேர்ந்த முருகேசன், 56, என்பவரை உதவிக்கு அழைத்து வந்தார்.
அவர், கலெக்டர் பிரபுசங்கரிடம் மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். இதையடுத்து கலெக்டர் பிரபுசங்கர், திருவள்ளூர் மாவட்ட காவல் துறைக்கு தகவல் அளித்தார். திருவள்ளூர் டவுன் போலீசார், முருகேசனிடம் விசாரித்தனர்.
அவரிடம், 'தமிழ்நாடு பிரஸ் கிளப்' என்ற பெயரில் போலியான அடையாள அட்டை இருந்தது. அதில் 'நடுநிலை அரசியல்' என்ற பத்திரிகையின் நிருபர் என குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், பத்திரிகையாளர் எனக்கூறி, அரசு அலுவலகங்களுக்கு சென்று, அதிகாரிகளை மிரட்டியும், இடைத்தரகராகவும் செயல்பட்டு வந்ததாக, திருவள்ளூர் கலெக்டர் அலுவலக - நீதியியல் மேலாளர் செல்வம் என்பவர், திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார், முருகேசனை கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.