/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விதை நெல் கிடைக்காமல் விவசாயிகள் அவதி
/
விதை நெல் கிடைக்காமல் விவசாயிகள் அவதி
ADDED : நவ 21, 2025 03:34 AM
திருத்தணி: கார்த்திகை மாத பட்டத்தில் நெல் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், வேளாண் விரிவாக்க மையத்தில் நெல் விதைகள் இல்லாததால், விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
திருத்தணி ஒன்றியத்தில், 27 ஊராட்சிகள் உள்ளன. இங்குள்ள பெரும்பாலான ஊராட்சிகளில் நெல், வேர்க்கடலை, கரும்பு, சவுக்கு, பயிறு வகை மற்றும் காய்கறி போன்றவை பயிரிட்டு வருகின்றனர்.
குறிப்பாக, நெற்பயிர் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மூன்று பருவத்தில் நெல் பயிர் மட்டும், 6,200 ஏக்கரில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
தற்போது, கார்த்திகை மாத பட்டத்தில், கோ - 51, குண்டு நெல் ஆகிய வகைகள் பயிரிடுவதற்கு விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர். ஆனால், வேளாண் விரிவாக்க மையத்தில் விதை நெல் இருப்பு இல்லை. இதனால், சில விவசாயிகள் அதிக விலை கொடுத்து, தனியார் விதை நெல் விற்பனை மையத்தில் வாங்கிச் செல்கின்றனர்.
எனவே, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விரைந்து நடவடிக்கை எடுத்து, வேளாண் துறையின் மூலம் மானிய விலையில் விதை நெல்கள் கொள்முதல் செய்து கொடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, திருத்தணி வேளாண் துறையின் பொறுப்பு உதவி இயக்குநர் பிரேம் கூறியதாவது:
கடந்த பருவத்தில் விவசாயிகள் பயிரிட்டிருந்த நெல் மூட்டைகளை, கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்று, அரசு நிர்ணயம் செய்த விலைக்கு விற்பனை செய்தனர்.
மேலும், நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் இருந்து நெல் பெற்ற, 7 - 15 நாட்களுக்குள் அரசு அறிவித்த தொகை விவசாயிகள் வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால், அதிகளவில் விவசாயிகள் நெல் பயிரிட துவங்கியுள்ளனர்.
நவரை பருவத்திற்கு, மொத்தம் 85 டன் விதை நெல், வேளாண் விரிவாக்க மையம் மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் விற்பனை செய்தோம்.
மேலும் கூடுதலாக, 15 - 25 டன் வரை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். அதற்கான பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

