/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உடைந்த மின்கம்பத்தால் ஊத்துக்கோட்டையில் அச்சம்
/
உடைந்த மின்கம்பத்தால் ஊத்துக்கோட்டையில் அச்சம்
ADDED : நவ 05, 2024 06:55 AM

ஊத்துக்கோட்டை : ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் வீடுகள், வணிக நிறுவனங்கள், தெருவிளக்குகள் ஆகியவற்றிற்கு, அங்குள்ள துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. இங்குள்ள சாவடித் தெருவின் வலதுபுறம் செல்லும் சாலையில் தாலுகா அலுவலகம், சார்நிலைக் கருவூலம், வேளாண்மை அலுவலகம் மற்றும் குடோன்கள் உள்ளன.
மேலும், குடியிருப்புகள், தனியார் கம்ப்யூட்டர் சென்டர்களும் உள்ளன. தாலுகாவின் பல பகுதிகளில் இருந்து வகுப்பு, வருமானம், இருப்பிடம், பட்டா, சிட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தினமும், 200க்கும் மேற்பட்ட மக்கள் இச்சாலை வழியே தாலுகா அலுவலகம் செல்கின்றனர்.
இதேபோல், சார்நிலைக் கருவூலம், வேளாண்மை அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான மக்கள் சென்று வருகின்றனர். ஜனநெருக்கடி மிகுந்த இந்த சாலையில், சார்நிலைக் கருவூலம் எதிரே உள்ள மின்கம்பத்தின் மேல் பகுதி உடைந்துள்ளது. மழைக்காலம் துவங்கி உள்ள நிலையில் பலமான காற்று அடித்தால் மின்கம்பம் உடைந்து கீழே விழும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து ஊத்துக்கோட்டை மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் எவ்வித பலனும் இல்லை. பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் முன் மாவட்ட மின்வாரிய உயரதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் செல்லும் சாலையில் உடைந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.