/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரபாத் ஏரியில் கழிவுநீர் கலப்பு மீன்கள் செத்து மிதப்பதால் அச்சம்
/
அரபாத் ஏரியில் கழிவுநீர் கலப்பு மீன்கள் செத்து மிதப்பதால் அச்சம்
அரபாத் ஏரியில் கழிவுநீர் கலப்பு மீன்கள் செத்து மிதப்பதால் அச்சம்
அரபாத் ஏரியில் கழிவுநீர் கலப்பு மீன்கள் செத்து மிதப்பதால் அச்சம்
ADDED : அக் 08, 2025 02:41 AM

ஆவடி:திருமுல்லைவாயல் அரபாத் ஏரி கழிவு நீரால் மாசடைந்து, டன் கணக்கில் மீன்கள் செத்து மிதப்பதால், பகுதிமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே திருமுல்லைவாயல், சி.டி.எச்., சாலையை ஒட்டி அரபாத் ஏரி உள்ளது. 65 ஏக்கர் பரப்பளவில் இருந்த இந்த ஏரி, ஆக்கிரமிப்பால் சுருங்கி தற்போது 38 ஏக்கராக உள்ளது.
இதை சுற்றி மணிகண்டபுரம், சரஸ்வதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன.
இப்பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிய அரபாத் ஏரி, கடந்த சில ஆண்டுகளாக கழிவு நீரால் மாசடைந்துள்ளது.
கடந்த 2022 ஏப்., 10-ம் தேதி, ஆவடி மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுவரும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை ஆய்வு செய்த, தேசிய பசுமை தீர்ப்பாய திடக்கழிவு மேலாண்மை குழு அதிகாரிகள், ஏரியை துாய்மைப்படுத்த வேண்டும் என, ஆவடி மாநகராட்சி அதிகாரிகளை அறிவுறுத்தினர். இதையடுத்து, அமைச்சர் நாசர் ஏரியை பார்வையிட்டார்.
ஆனால், ஏரியை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில், நேற்று காலை முதல் ஏரியில் டன் கணக்கில் ஜிலேபி மீன்கள் செத்து மிதந்து வருகின்றன.
இதனால் கடும் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நச்சுத்தன்மை கலந்த தண்ணீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு, மக்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தாக மாறும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இது குறித்த புகாரை அடுத்து, மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'அரபாத் ஏரியில், கழிவுநீர் கலப்பதால் மீன்கள் செத்து மிதக்கவில்லை. போதுமான தண்ணீர் இல்லாமல் மீன்கள் இறந்துள்ளன.
'தற்போது, ஏரியில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்' என்றனர்.