ADDED : மார் 05, 2024 06:41 AM
திருத்தணி,: திருத்தணி ஒன்றியத்தில், 27 ஊராட்சிகளில் விவசாயம் அதிகளவில் செய்யப்படுகிறது. இந்நிலையில் வேர்கடலை, நெல் மற்றும் கரும்பு பயருக்கு அதிகளவில் பயன்படுத்தப்படும் ஜிப்சம், ஜிங்க் சல்பேட் போன்ற உரங்கள் விவசாயிகளுக்கு, மானிய விலையில் வழங்குவதற்கு வேளாண் துறையினர் தீர்மானித்துள்ளனர்.
மேலும் மேற்கண்ட உரங்கள் பெறுவதற்கு திருத்தணி மற்றும் கே.ஜி.கண்டிகையில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்திற்கு நேரில் வந்து மானிய விலையில் வாங்கிச் செல்லலாம்.
இது குறித்து திருத்தணி வேளாண் உயர்அதிகாரி ஒருவர் கூறியதாவது:
திருத்தணி மற்றும் கே.ஜி.கண்டிகை வேளாண் விரிவாக்க மையத்தில், 30,000 கிலோ ஜிப்சம், 1500 கிலோ ஜிங்க் சல்பேட் தற்போது இருப்பு உள்ளது. ஒரு விவசாயிக்கு, அதிகபட்சமாக 200 கிலோ ஜிப்சம், 10 கிலோ ஜிங்க் சல்பேட் உரம் வழங்கப்படும். ஜிப்சம் ஒரு கிலோ, 4 ரூபாய். இதில் ஒரு கிலோவிற்கு ஒரு ரூபாய் மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. அதே போல், ஒரு கிலோ ஜிங்க் சல்பேட், 68 ரூபாய். இதில் ஒரு கிலோவிற்கு, 25 ரூபாய் வழங்கப்படுகிறது. மேற்கண்ட உரங்கள் தேவைப்படும் விவசாயிகள் தங்களது நிலத்தின் சர்வே எண், ஆதார் கார்டு மற்றும் மொபைல் எண்ணுடன் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம்.
உரங்கள் ஸ்டாக் உள்ளவரை மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.
உரங்கள் வாங்கும் அனைத்து விவசாயிகளுக்கு அடியுரம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
