சரக்கு ரயிலில் தீ விபத்து கடம்பத்துாரில் நிறுத்தம்
சரக்கு ரயிலில் தீ விபத்து கடம்பத்துாரில் நிறுத்தம்
ADDED : பிப் 13, 2026 05:23 AM

கடம்பத்துார்: சரக்கு ரயிலில், திடீரென ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
சென்னை, எண்ணுார் அடுத்த அத்திப்பட்டு புதுநகர் இருந்து நேற்று முன்தினம் இரவு நிலக்கரி ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா நோக்கி சென்று கொண்டிருந்தது.
நள்ளிரவு 1:00 மணியளவில் ஏகாட்டூர் ரயில் நிலையத்தை கடந்து சென்ற போது இரு பெட்டிகளிலிருந்து புகை வந்தது.
தீபற்றி எரிந்ததை கண்ட ஏகாட்டூர் ரயில் நிலைய கேட் கீப்பர் திருவள்ளூர் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.
இதையடுத்து கடம்பத்துார் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டது.
கடம்பத்துார் நிலைய மேலாளர் கிருஷ்ணகுமார் பேரம்பாக்கம் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தார்.
தீயணைப்பு நிலைய அலுவலர் பிரசன்னா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீப்பற்றி எரிந்த பெட்டிகளில் தண்ணீரை கொண்டு தீ மற்றும் புகையை கட்டுப்படுத்தினர்.
பின் ரயில் அதிகாலை 4:00 மணியளவில் ரேணிகுண்டா நோக்கி புறப்பட்டு சென்றது.
