அடிக்கடி பழுதாகும் அரசு பேருந்துகள் வெளியூர் செல்லும் பயணியர் அவதி
அடிக்கடி பழுதாகும் அரசு பேருந்துகள் வெளியூர் செல்லும் பயணியர் அவதி
UPDATED : அக் 30, 2026 08:47 PM
ADDED : அக் 30, 2026 08:44 PM

திருமழிசை: திருமழிசை அருகே, சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், அடிக்கடி பழுதாகும் அரசு பேருந்துகளால், வெளியூர் செல்லும் பயணியர் சிரமப்பட்டு வருகின்றனர்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து, காஞ்சிபுரம், வேலுார், தருமபுரி, ஆற்காடு, ஆரணி உட்பட, பல பகுதிகளுக்கு விழுப்புரம் கோட்ட அரசு பேருந்துகள் சென்று வருகின்றன.
இந்த பேருந்துகள், முறையான பராமரிப்பில்லாமல் இயக்கப்படுவதால், அடிக்கடி பழுதாகி பாதி வழியில் சாலையில் நின்று விடுகின்றன. இதனால், பயணியர் மற்றும் மாணவ – மாணவியர் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து, வேலுார் மற்றும் ஆற்காடு பகுதிகளுக்கு, விழுப்புரம் கோட்ட அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.
இதில், பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில், வேலுார் பேருந்தும், பாப்பன்சத்திரம் பகுதியில் ஆற்காடு பேருந்தும் பழுதாகி நின்றதால், மக்கள் பாதி வழியில் செய்வதறியாது தவித்தனர்.
பாதி வழியில் தவித்த பயணியர், மாற்று பேருந்து வருவதற்கு தாமதமானதால், சாலையிலேயே வெகு நேரம் காத்திருந்தனர்.
இதில், பாப்பன்சத்திரம் பகுதியில் பழுதாகி நின்ற பேருந்திற்கு பின்னால் வந்த ஆற்காடு பேருந்து, சாலையில் காத்திருந்த பயணியரை ஏற்றாமல் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு, பேருந்துகள் முறையாக பராமரிப்பில்லாததும், போதுமான உதிரி பாகங்கள் மற்றும் பணியாளர்கள் இல்லாததுமே காரணம் என, பேருந்து ஓட்டுனர்களே குற்றம் சாட்டி வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, அரசு பேருந்துகளை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
