தலக்காஞ்சேரியில் குப்பை எரிப்பு மாணவ - மாணவியர் பரிதவிப்பு
தலக்காஞ்சேரியில் குப்பை எரிப்பு மாணவ - மாணவியர் பரிதவிப்பு
ADDED : ஜன 25, 2026 05:23 AM

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த தலக்காஞ்சேரி கிடங்கில், துப்புரவு ஊழியர்கள் அடிக்கடி குப்பை கழிவுகளுக்கு தீ வைக்கின்றனர். இதனால் ஏற்படும் புகையால், அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவ - மாணவியர் மூச்சுத்திணறலால் பரிதவித்து வருகின்றனர்.
திருவள்ளூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில், தினமும் மட்கும் மற்றும் மட்காதவை என, 35 டன் குப்பை கழிவுகள் சேகரமாகின்றன. இதை தனியார் துப்புரவு ஊழியர்கள் வீடுதோறும் சென்று சேகரித்து வருகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன் வரை, நகராட்சியில் சேகரமாகும் குப்பை கழிவுகள், ஈக்காடு அருகே உள்ள தலக்காஞ்சேரியில் கொட்டப்பட்டு வந்தது.
இடப்பற்றாக்குறை ஏற்பட்டதுடன், குப்பைகளை கொட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கடம்பத்துார் ஒன்றியம் நுங்கம்பாக்கம் கிராமத்தில், 4.7 ஏக்கர் நிலத்தில், 5.98 கோடி ரூபாயில், குப்பைகளை உரமாக மாற்றும் திட்டம் துவக்கப்ப ட்டது.
நகராட்சிக்கு உட்பட்ட 16 இடங்கள் மற்றும் ஈக்காடு அருகிலும் உரக்குடில் அமைத்து, குப்பை கழிவுகள் உரமாக மாற்றப்பட்டு வருகின்றன.
ஆறு ஆண்டுகளுக்கு முன், தலக்காஞ்சேரியில் சேகரமான குப்பையில் பாதி, 'பயோமைனிங்' முறையில் அகற்றப்பட்டது.
மீதமுள்ள குப்பைகள் அங்கேயே கிடக்கின்றன. தற்போது, வீடுகளில் இருந்து பெறப்படும் குப்பைகளை, துப்புரவு ஊழியர்கள் மீண்டும் தலக்காஞ்சேரி கிடங்கில் கொட்டி வருகின்றனர்.
மேலும், அவ்வப்போது குப்பைகளை தீ வைத்து எரித்து வருகின்றனர்.
இதன் காரணமாக, அப்பகுதியில் புகை மண்டலம் சூழ்ந்து, குடியிருப்பு மக்கள் மற்றும் பள்ளி மாணவ - மாணவியர் மூச்சுத்திணறால் பாதிக்கப் பட்டு வருகின்றனர் .
எனவே, தலக்காஞ்சேரியில் உள்ள குப்பை கழிவுகளை, மீண்டும் 'பயோமைனிங்' முறையில் முற்றிலும் அகற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் மற்றும் மாணவ - மாணவியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
