ADDED : ஜன 27, 2025 02:01 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், கருட சேவையில் உற்சவர் பெருமாள் நேற்று எழுந்தருளினார்.
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தை பிரம்மோற்சவம், கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும், பிப்.2ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ள இவ்விழாவில், தினமும், காலை, மாலையில், உற்சவர் வீரராகவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
விழாவின் முக்கிய நிகழ்வான கருடசேவை நேற்று நடந்தது. அதிகாலை, கோபுர தரிசனமும், தொடர்ந்து உற்சவர் வீரராகவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கருட வாகனத்தில், நான்கு வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, ஹனுமந்த வாகன சேவை நடைபெற்றது.
வரும் 29ம் தேதி, தை அமாவாசையை முன்னிட்டு வீரராகவ பெருமாளுக்கு ரத்னாங்கி சேவை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேர் திருவிழா, வரும் 30ம் தேதி, காலை 7:30 மணிக்கு நடக்கிறது.

