/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குத்தம்பாக்கத்தில் 152 ஏக்கரில் திரைப்பட நகரம் சர்வதேச தரத்தில் அமைக்க அரசு நடவடிக்கை
/
குத்தம்பாக்கத்தில் 152 ஏக்கரில் திரைப்பட நகரம் சர்வதேச தரத்தில் அமைக்க அரசு நடவடிக்கை
குத்தம்பாக்கத்தில் 152 ஏக்கரில் திரைப்பட நகரம் சர்வதேச தரத்தில் அமைக்க அரசு நடவடிக்கை
குத்தம்பாக்கத்தில் 152 ஏக்கரில் திரைப்பட நகரம் சர்வதேச தரத்தில் அமைக்க அரசு நடவடிக்கை
ADDED : ஜன 26, 2024 12:32 AM

சென்னை:திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையை அடுத்த குத்தம்பாக்கத்தில் 152 ஏக்கரில் சர்வதேச தரத்தில் நவீன திரைப்பட நகரம் அமைப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை தமிழக அரசு துவக்கி உள்ளது.
நாட்டில் மும்பைக்கு அடுத்தபடியாக திரைப்பட படப்பிடிப்பு மற்றும் தயாரிப்பு பணிகளில், 100 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை முக்கியத்துவம் வகிக்கிறது. தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாது, தென்னிந்திய மொழிகளில் பெரும்பாலான திரைப்படங்கள் சென்னையில் தயாரிக்கப்படுகின்றன.
இதை கருத்தில் கொண்டு, சென்னையில் தரமணியில் தமிழக அரசு திரைப்பட நகரத்தை உருவாக்கியது. இங்கு படப்பிடிப்புகளுடன், திரைப்படம் சார்ந்த படிப்புகளும் நடத்தப்படுகின்றன.
சென்னையில் இட நெரிசல் காரணமாக, பாரம்பரிய அடையாளமாக இருந்த பல்வேறு படபிடிப்பு தளங்கள் வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறி வருகின்றன. படபிடிப்பு தளங்கள் மட்டுமல்லாது, தியேட்டர்களும் மாறி வருகின்றன.
இதனால், சென்னையில் திரைப்பட படப்பிடிப்புக்கு ஏற்ற தளங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு, சில ஆண்டுகளுக்கு முன் சென்னை - பெங்களூரு சாலையில், செம்பரம்பாக்கம் அருகில் தனியார் நிறுவனம் சார்பில் திரைப்பட நகரம் துவக்கப்பட்டது. இதையடுத்து, பெரும்பாலான திரைப்பட படப்பிடிப்புகள், டிவி நிகழ்ச்சி தயாரிப்பு உள்ளிட்ட பணிகள், இங்கு இடம் பெயர்ந்தன.
இந்நிலையில், 2023 - 24 பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, திரைப்பட துறை மேம்பாட்டுக்கான 16 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில், 'சென்னை புறநகரில், தனியார் பங்களிப்புடன் நவீன திரைப்பட நகரம் ஏற்படுத்தப்படும்' என அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பான பூர்வாங்க பணிகள், தமிழக உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் வாயிலாக துவக்கப்பட்டுள்ளது.
சென்னை - பெங்களூரு சாலையில், திருமழிசை அடுத்த குத்தம்பாக்கத்தில், புதிய திரைப்பட நகரத்துக்காக 152 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இங்கு திரைப்பட நகரம் அமைப்பதற்கான முழுமை திட்டத்தை தயாரிக்க கலந்தாலோசகர் தேர்வுக்கான அறிவிப்பை, தமிழக உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
வசதிகள் என்ன?
குத்தம்பாக்கத்தில் அமைய உள்ள திரைப்பட நகரில், அனைத்து விதமான நவீன வசதிகளும் இடம் பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
குத்தம்பாக்கத்தில், மூன்று வெவ்வேறு சர்வே எண்களுக்கு உட்பட்ட 152 ஏக்கர் நிலத்தில், நவீன முறையிலான திரைப்பட நகரம் அமைக்கப்பட உள்ளது. தேசிய, சர்வதேச திரைப்பட நகரங்களுக்கு இணையான வசதிகள் இதில் அமையும்.
திரைப்பட துறை சார்ந்த அருங்காட்சியகம், திரைப்பட தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சி மையம், திரைப்பட சுற்றுலா மையம், திரைப்படங்களுக்கான 'கன்டென்ட்' எனப்படும் கருப்பொருள் உருவாக்கும் வளாகம், தொழில்நுட்ப மையம் ஆகியவை ஏற்படுத்தப்படும்.
உள்ளரங்கு மற்றும் வெளிப்புற படபிடிப்பு தளங்கள் பல்வேறு அளவுகளில் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்படும். திரைப்படம் மட்டுமல்லாது, தொலைக்காட்சி படப்பிடிப்புக்கான தளங்கள், உணவகங்கள், தங்குமிடங்கள் கட்டப்படும்.
படபிடிப்புக்கு பிந்தைய தயாரிப்பு சார்ந்த அனைத்து பணிகளையும் மேற்கொள்வதற்கான நவீன வளாகங்களும் அமைக்கப்படும். திரைப்பட தயாரிப்பு மட்டுமல்லாது அது சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தும் அரங்குகள், கூட்ட அரங்குகள், விருந்தோம்பல் வளாகங்கள் அமைக்கப்படும்.
கலந்தாலோசகர் வாயிலாக முதலில் முழுமை திட்டம் தயாரிக்கப்படும். அதன் அடிப்படையில் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து கட்டுமானப் பணிகள் அடுத்த சில ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.