/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சென்னை தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பில் அரசு அலட்சியம்
/
சென்னை தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பில் அரசு அலட்சியம்
சென்னை தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பில் அரசு அலட்சியம்
சென்னை தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பில் அரசு அலட்சியம்
ADDED : நவ 03, 2025 01:12 AM

கும்மிடிப்பூண்டி: சென்னை -- கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், தமிழக எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் படுமோசமாகவும், ஆந்திராவில் அருமையாகவும் பராமரிக்கப்படுகிறது.
சுங்க கட்டணம் வசூலித்தும், தமிழக பகுதியை முறையாக பராமரிக்காத தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மீது வாகன ஓட்டிகள் கடும்அதிருப்தியில் உள்ளனர்.
சென்னை -- கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், செங்குன்றம் அடுத்த நல்லுார் சுங்கச்சாவடி முதல் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் சோதனைச்சாவடி வரையிலான 31 கிலோமீட்டர் சாலையை, 'எஸ்.பி.எல்.,' என்ற தனியார் நிறுவனம் ஒன்று பராமரித்து வருகிறது.
அதே போல், எளாவூர் சோதனைச்சாவடியை கடந்து ஆந்திர எல்லை துவங்கும் இடத்தில் இருந்து சூளூர்பேட்டை வரையிலான சாலையை, 'ஸ்வர்ணா டோல்வே' என்ற தனியார் நிறுவனம் பராமரித்து வருகின்றனர்.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி, மேற்கண்ட இரு நிறுவனங்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சாலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இதில், ஆந்திர எல்லைக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில், பாதுகாப்பு அம்சங்களுடன், தினசரி ஒரு கிலோ மீட்டர் என்ற கணக்கில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆந்திர எல்லைக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலை பசுமையாகவும், சுத்தமாகவும் காட்சியளிக்கிறது.
ஆனால், தமிழக பகுதியில், முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால், சாலை மைய பகுதியில் செடிகள், குப்பைகள் மண்டியும், சாலையோரம் மணல் குவியலும், மழைநீர் தேங்கியும் காணப்படுகிறது.
வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கும் நிலையில், தமிழக பகுதியை மட்டும் அலங்கோலமாக வைத்திருப்பது அதிருப்தி அளிக்கிறது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது என வாகன ஓட்டிகள் கூறினர்.
ஆந்திர மாநிலத்தில் பராமரிப்பது போன்று, தமிழக பகுதிக்கு உட்பட்ட சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையையும் இயற்கையான சூழலில், பாதுகாப்பான பயணத்தை வழங்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

