மூன்று ஆண்டுகளாக ஜவ்வாக இழுக்கும் கும்மிடி ரயில் நிலைய மேம்பாட்டு பணி
மூன்று ஆண்டுகளாக ஜவ்வாக இழுக்கும் கும்மிடி ரயில் நிலைய மேம்பாட்டு பணி
UPDATED : ஆக 26, 2026 03:45 PM
ADDED : ஆக 26, 2026 03:41 PM

கும்மிடிப்பூண்டி:மத்திய ரயில்வே துறை சார்பில் 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட கும்மிடிப்பூண்டி ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள், மூன்று ஆண்டுகளாக ஜவ்வாக இழுத்தடிக்கப்பட்டு வருவதாக, பயணியர் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழகத்தின் வடகோடியில் அமைந்துள்ள கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம், புறநகர் மின்சார ரயில்களின் முனையமாகும்.
சிப்காட் தொழிலாளர்கள், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், வியாபாரிகள் என, தினசரி ஆயிரக்கணக்கான மக்கள், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம், மத்திய ரயில்வே துறை சார்பில், 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், 25 கோடி ரூபாய் செலவில், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை தரம் உயர்த்தி நவீனமயமாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
தரம் உயர்த்தப்பட்ட நடைமேடைகள், நான்கு பார்க்கிங் வளாகங்கள், பஜார் மற்றும் சிப்காட் பகுதிகளில், ரயில் நிலைய நுழைவாயில் கட்டடங்கள், லிப்ட், எஸ்கலேட்டர், வணிக வளாகம், பயணியர் ஓய்வு எடுக்கும் அறைகள், நவீன ஒப்பனை அறைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 2025ம் ஆண்டு மத்தியில் பணிகள் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின், பல முறை காலக்கெடு அளிக்கப்பட்டும், கட்டுமான பணிகள் முடிந்தபாடில்லை.
குறிப்பாக, கடந்த ஓராண்டு காலமாக, ஆமை வேகத்தில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. மேம்பாட்டு பணியின் தொடக்கத்தில், 25 கோடி ரூபாய் என இருந்த திட்ட மதிப்பீடு, தற்போது 37.76 கோடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும், 70 சதவீத பணிகள் மட்டுமே நிறைவு பெற்றுள்ளதாக, ரயில் பயணியர் தெரிவிக்கின்றனர். எனவே, மேலும் தாமதிக்காமல், எஞ்சிய பணிகளை விரைந்து முடிக்க, தென்னக ரயில்வே நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில் பயணியர் வலியுறுத்தி வருகின்றனர்.
