வெள்ள பாதிப்புகளை தவிர்க்க தனியாருடன் கைகோர்ப்பு: 9 கால்வாய்களை துார் வாரும் மாவட்ட நிர்வாகம்
வெள்ள பாதிப்புகளை தவிர்க்க தனியாருடன் கைகோர்ப்பு: 9 கால்வாய்களை துார் வாரும் மாவட்ட நிர்வாகம்
UPDATED : ஆக 11, 2026 07:30 AM
ADDED : ஆக 10, 2026 07:32 PM

திருவள்ளூர்: வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக, நீர்வழித்தட கால்வாய்களை துார் வாரி அகலப்படுத்தும் பணிகள், தனியார் பங்களிப்புடன் தொடங்கி நடந்து வருகின்றன. மாவட்ட நிர்வாகம் வாயிலாக, 67.3 கி.மீ., துாரத்திற்கு 9 நீர்வழித்தட கால்வாய்கள் துார் வாரப்பட்டு வருகின்றன. திருவள்ளூர் மாவட்டத்தில், 47 சதவீதம் பேர் விவசாயம் மற்றும் அதை சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில், 2.80 லட்சம் ஏக்கர் பரப்பளவில், நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன.
ஆரணி, கொசஸ்தலை மற்றும் கூவம் ஆறு மற்றும் ஏரி, கிணறு போன்றவற்றின் வாயிலாக, விவசாய பணிகளுக்கு தேவையான நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை, திடீர் புயல், மழை போன்றவை அதிகமாக இருக்கும் சமயத்தில், பல ஆயிரக்கணக்கான விளைநிலங்களில் வெள்ள நீர் புகுந்து விடுகிறது.
மாவட்டத்தில், கடம்பத்துார், திருவாலங்காடு, திருத்தணி, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி ஒன்றியங்களில், ஒவ்வொரு மழை காலத்திலும், விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி விடுகின்றன. இதனால், விவசாயிகள் பெருமளவில் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
இதற்கு காரணம், ஏரிகளில் இருந்து பிரதான ஆறுகளுக்குச் செல்லும் கால்வாய்களும், பிற ஏரிகளை இணைக்கும் கால்வாய்களும், பல ஆண்டுகளாக துார் வாரப்படாததால், செடிகள் வளர்ந்தும், மண் படிந்து மேடாகவும் மாறி விட்டன.
இதையடுத்து, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், துறை அலுவலர்கள் மேற்கொண்ட கள ஆய்வில், பல ஆண்டுகளாக வண்டல் மண் தேக்கம், அடர்ந்த புதர்கள், முட்செடிகள், மரங்கள், நீர் தாவரங்கள் மற்றும் குப்பை கழிவுகள் தேங்கியிருப்பது தான், கால்வாயின் நீரேற்றுத் திறன் கணிசமாகக் குறைந்திருப்பதற்கு காரணம் என கண்டறியப்பட்டது. சில பகுதிகளில், கால்வாயின் அசல் படுகை அமைப்பும் மாறியிருந்தது.
உள்ளூர் ஆக்கிரமிப்புகள், விழுந்த மரங்கள் மற்றும் பிற தடைகளும், வெள்ளநீர் சீராக செல்ல தடையாக இருந்தன. இந்த சூழ்நிலையால், கால்வாயின் நீரியல் செயல்திறன் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாவட்ட நிர்வாகம், தனியார் நிறுவனங்களின் உதவியுடன், கால்வாய்களை சீரமைக்கும் பணியை தொடங்கியுள்ளது.
முதல் கட்டமாக, கரிக்கலவாக்கம் ஏரியில் தொடங்கி, வெள்ளியூர், தாமரைப்பாக்கம், குருவாயல், கொடுவள்ளி, திருக்கண்டலம் கிராமங்கள் வழியாக, கொசஸ்தலையாறு செல்லும் கட்டாங்கல் கால்வாய் உட்பட, 9 நீர்வழித்தட கால்வாய்களில், மொத்தம் 67.3 கி.மீ., துாரத்திற்கு துார் வாரும் பணி நடந்து வருகிறது.
சீரமைப்பு பணிகள் குறித்து, திருவள்ளூர் கலெக்டர் கவிதா கூறியதாவது:
ஒவ்வொரு மழை காலத்திலும், கால்வாய்களில் இருந்தும், ஆறுகளில் இருந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, வயல்வெளிகள் மற்றும் கிராமங்களில் உட்புகுந்து, பெருத்த பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கு காரணம், பல ஆண்டுகளாக நீர்வழித்தடங்களை சீரமைக்காதது தான் என, துறை அலுவலர்களின் ஆய்வில் கண்டறியப்பட்டது.
எனவே, வரவிருக்கும் வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக, அவசரமாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளாவிட்டால், கனமழை நேரங்களில் வெள்ளநீர் கரைபுரண்டு அருகிலுள்ள குடியிருப்புகள், விவசாய நிலங்கள், சாலைகள் மற்றும் பொதுக் கட்டமைப்புகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இதையடுத்து, முதல் கட்டமாக, 9 இடங்களில் உள்ள, 67.3 கி.மீ., துாரத்திற்கு, நீர்வழித்தட கால்வாய்கள், தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன், நீர்வளத் துறையின் தொழில்நுட்ப மேற்பார்வையில் துார்வாரப்பட உள்ளன.
இப்பணிகளில், வண்டல் மண் அகற்றுதல், புதர் மற்றும் முட்புதர் அகற்றுதல், தேவையான இடங்களில் மரங்களை வெட்டி அகற்றுதல், நீர் தாவரங்கள் மற்றும் குப்பை கழிவுகளை அகற்றுதல், கால்வாய் படுகை மற்றும் பக்கச் சரிவுகளை அசல் வடிவமைப்பிற்கு ஏற்ப மீளமைத்தல் உள்ளிட்ட பணிகள் இடம்பெற்றுள்ளன.
பணி நிறைவு செய்யப்பட்ட பகுதிகளில், கால்வாயின் நீரேற்றுத் திறன் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தப்பட்டு, வெள்ளநீர் தடையின்றி செல்லும் வகையில் துார் வாரப்பட்டுள்ளது.
மீதமுள்ள பகுதிகளிலும், பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அவை அனைத்தும், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக நிறைவு செய்ய, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின், வெள்ளச் சேதங்கள் குறைக்கப்பட்டு, பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்துக்கள், விவசாய நிலங்கள் பாதுகாக்கப்படுவதுடன், நீர்வளத் துறையின் பாசன மற்றும் வடிகால் அமைப்பின் செயல்திறனும் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படும்.
மேலும், கொசஸ்தலையாறு வடிநிலை கோட்டத்தில் - 51, ஆரணி ஆறு வடிநிலை கோட்டத்தில் - 54 என, மொத்தம் 105 கால்வாய்கள் 302.95 கி.மீ., நீளம் துார்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால், 154 கிராமங்களைச் சேர்ந்த, 14,904 ஆயக்கட்டுகளைச் சேர்ந்த, 42,855 விவசாயிகள் பயன்பெறுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
துார் வாரப்படும் கால்வாய்கள் இடம் துாரம் (கி.மீட்டரில்) கட்டாங்கல் கால்வாய் 15.6 சுருட்டபள்ளி வினியோகக் கால்வாய் 9 கீழ்முதலம்பேடு 11.40 வீரங்கிவேடு மடுவு 9.7 வெள்ளவரி மடுவு 2.60 திருப்பாலைவனம் கால்வாய் 0.38 சுண்ணாம்புக்கல் ஓடை கால்வாய் 7.0 வயலுார் சின்ன தாமரை கால்வாய் 1.05 ஜாகிர்மங்கலம் முதல் பட்டரைபெரும்புதுார் வரை 6.0 மொத்தம் 67.3
