கும்மிடி தாமரை ஏரி விவகாரத்தில் அரசு துறைகள்..கண்ணாமூச்சி!:. மீண்டும் தொழிற்சாலை கழிவுநீர் கலக்கும் அபாயம்
கும்மிடி தாமரை ஏரி விவகாரத்தில் அரசு துறைகள்..கண்ணாமூச்சி!:. மீண்டும் தொழிற்சாலை கழிவுநீர் கலக்கும் அபாயம்
UPDATED : ஆக 03, 2026 03:51 AM
ADDED : ஆக 02, 2026 07:02 PM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி தாமரை ஏரியில், கடந்த ஆண்டு தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுநீர் கலந்து, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதற்கான நிரந்தர தீர்வு காணப்படாத நிலையில், அடைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையோர வரத்து கால்வாய் துார் வாரப்பட்டதால், இந்த ஆண்டும் தொழிற்சாலைகளின் கழிவுநீர் ஏரியில் கலக்கும் ஆபத்தான சூழல் நிலவி வருகிறது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நான்கு அரசு துறைகளும், ஒவ்வொரு ஆண்டும் மலுப்பலாக பதில் சொல்லி கண்ணாமூச்சி ஆடி வருவதால், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், அப்பகுதி மக்களும் அதிருப்தியில் உள்ளனர்.
கும்மிடிப்பூண்டி நகரின் நீராதரமான, 48 ஏக்கர் பரப்பளவு கொண்ட தாமரை ஏரி, நீர்வளத்துறையின் பராமரிப்பில் உள்ளது.
ஏரியின் மேற்கு பகுதியில் உள்ள சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் மழைநீர் கால்வாய் வழியாக, கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்சாலைகளின் கழிவுநீரும், டேங்கர் லாரியில் ஏற்றி வரப்படும் கழிவுநீரும் திறந்து விடப்பட்டது.
அவை நேரடியாக ஏரியில் கலப்பதால், கடந்த சில ஆண்டுகளாக, தாமரை ஏரியில் கழிவுநீர் மட்டுமே தேங்கி நின்றது. அதன் விளைவாக, கடந்த ஆண்டு, ஏரியின் மேற்பரப்பில் கருமை நிற எண்ணெய் படலம் படர்ந்து, துர்நாற்றம் வீசியது.
அதனால், கும்மிடிப்பூண்டி நகர் பகுதியின் நிலத்தடி நீர் கடுமையாக பாதித்து, தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்கள் அனைத்தும் கறுத்து போயின. மொத்தத்தில், நகர் பகுதியின் நிலத்தடி நீர் எந்த பயன்பாட்டிற்கும் தகுதியற்றதாக மாறியது.
இந்த விவகாரம் பூதாகரமானதால், மாவட்ட கலெக்டர் மேற்பார்வையில், ஏரியில் படர்ந்திருந்த ஆகாய தாமரைகள் மற்றும் எண்ணெய் படலங்கள் அகற்றப்பட்டன.
தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்ற நீர்வளத்துறையினர், தொழிற்சாலை கழிவுநீர் வரத்தை தடுக்கும் விதமாக, தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள மழைநீர் கால்வாயை அடைத்தனர்.
இந்நிலையில், தற்போது மழைக்காலம் தொடங்க இருப்பதால், மழைநீர் வெளியேற வழியின்றி, மழை வெள்ளத்தில் சிப்காட் வளாகம் மூழ்கும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மேற்கண்ட கால்வாய் அடைப்பை நீக்கி, கால்வாயை துார் வாரும் பணிகளை, நான்கு நாட்களுக்கு முன் கும்மிடிப்பூண்டி சிப்காட் நிர்வாகம் தொடங்கியது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பேரூராட்சி நிர்வாகம், துார் வாரும் பணிகளை தடுத்து நிறுத்தியது. இருப்பினும், சில நாட்களுக்கு முன், துார் வாரும் பணிகளை மீண்டும் துரிதப்படுத்திய சிப்காட் நிர்வாகம், அடைப்புகளை நீக்கி, கால்வாயை அகலப்படுத்தியது.
இதனால், கடந்த ஆண்டை போல், இந்த ஆண்டும் தாமரை ஏரியில் தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலக்கும் அபாயம் இருப்பதாக, அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இது குறித்து, சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம், நீர்வளத்துறை, சிப்காட் நிர்வாகம் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையினர், 'தாமரை ஏரியில் தொழிற்சாலை கழிவுநீர் கலக்காமல் பாதுகாக்கப்படும்' என, மலுப்பலாக பதில் அளிக்கின்றனரே தவிர, நிரந்தர தீர்வு காண எந்த முனைப்பும் காட்டவில்லை என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
தாமரை ஏரி விவகாரம் குறித்து, சம்பந்தப்பட்ட சுற்றுச்சூழல் அலுவலர் ஒருவர் கூறுகையில், 'கழிவுநீர் வெளியேற்றும் தொழிற்சாலைகளை, தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். சிப்காட் வளாகத்தில் இருந்து கழிவுநீர் வெளியேறாதபடி கட்டுப்படுத்தப்படும்' என தெரிவித்தார்.
