/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பகலிலும் ஒளிரும் உயர்கோபுர மின் விளக்குகள்
/
பகலிலும் ஒளிரும் உயர்கோபுர மின் விளக்குகள்
ADDED : டிச 23, 2024 02:05 AM

திருவள்ளூர்:தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சிக்னல் பகுதியில் உள்ள உயர்கோபுர மின்விளக்குகள் அணையா விளக்காக பகல் நேரத்திலும் எரிந்து வருவது மின்சாரம் வீணாவதோடு, மக்களின் வரி பணமும் வீணாகி வருவதாக பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
சென்னை - பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில், திருமழிசை, பாப்பரம்பாக்கம், திருமழிசை - ஊத்துக்கோட்டை மாநில நெடுஞ்சாலையில் வெங்கத்துார், மணவாள நகர், தண்டலம் - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலை மற்றும் திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் மாநில நெடுஞ்சாலை உட்பட பல பகுதிகளில் அமைக்கப்ட்டுள்ள உயர்கோபுர மின்விளக்குகள் பகலிலும் எரிந்து வருகின்றன.
எனவே, மாவட்ட நிர்வாகம் பகல் நேரங்களில் உயர்கோபுர மின்விளக்குகள் எரிவதை தடுக்கவும் மின்சாரத்தை சேமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, மின்வாரிய உதவி பொறியாளர் ஒருவர் கூறியதாவது:
தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைப்பது மட்டும் தான் எங்கள் பணி. அந்த விளக்குகளை பராமரிப்பு பணிகளை சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் தான் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், உயர்கோபுர மின்விளக்குகளை எரிய வைப்பதற்கு, மாலை 6:00 மணிக்கு எரிவது மற்றும் காலை 6:00 மணிக்கு அணைப்பது என ஆட்டோமெட்டிக் சுவீட்ச் அமைக்க சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.