தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ஆந்திர சவுடு மண் லாரிகளுக்கு தமிழக அதிகாரிகள் கிடுக்கிப்பிடி!விதிமீறிய 250 லாரிகள் மீது போலீஸ் மூலம் நடவடிக்கை

ஆந்திர சவுடு மண் லாரிகளுக்கு தமிழக அதிகாரிகள் கிடுக்கிப்பிடி!விதிமீறிய 250 லாரிகள் மீது போலீஸ் மூலம் நடவடிக்கை

ஆந்திர சவுடு மண் லாரிகளுக்கு தமிழக அதிகாரிகள் கிடுக்கிப்பிடி!விதிமீறிய 250 லாரிகள் மீது போலீஸ் மூலம் நடவடிக்கை


UPDATED : ஜூலை 09, 2026 07:46 PM

ADDED : ஜூலை 09, 2026 07:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 09, 2026 07:46 PM ADDED : ஜூலை 09, 2026 07:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், அனைத்து வகை சவுடு மண் குவாரிகள் செயல்படாத நிலையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து, விதிமீறி கொண்டு வரப்படும் சவுடு மண் கடத்தலை தடுக்க, மாநில கனிமவள துறையினர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2 நாட்களில் மட்டும், 'போலி பில், ஓவர் லோடு' உள்ளிட்ட விதிமீறலில் ஈடுபட்ட 250 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, காவல் துறை நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, சுரங்கத் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, எண்ணுார் - மாமல்லபுரம் ஆறு வழி சாலை உள்ளிட்ட பல்வேறு தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடந்து வருகின்றன.

மேலும், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களைச் சுற்றிலும், மத்திய, மாநில பொதுத் துறை நிறுவனங்களின் விரிவாக்க பணிகளும் நடந்து வருகின்றன.

அந்த பணிகளுக்கு தேவையான சவுடு மற்றும் கிராவல் மண் எடுக்க, திருவள்ளூர் மாவட்டத்தில், 15க்கும் மேற்பட்ட ஏரிகளில் குவாரிகள் இயங்கி வந்தன.

அதுமட்டுமின்றி, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில், அடுக்குமாடி குடியிருப்புகள், தொழிற்சாலைகள், தனி நபர் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகளுக்காக, 10க்கும் மேற்பட்ட இடங்களில் வணிக குவாரிகளும் இயங்கி வந்தன.

தேர்தல் சமயத்தில், அந்த குவாரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில், கட்டுமான பகுதிகளுக்கு தேவையான, குண்டு கல், கிராவல் மண் மற்றும் சவுடு மண் ஆகியவை கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தனியார் லாரி உரிமையாளர்கள், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ஆந்திராவில் இருந்து, தினமும் 1,000க்கும் மேற்பட்ட லாரிகளில் மண் எடுத்து வந்து கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர்.

ஆந்திர மாநிலம், சத்தியவேடு, காரூர், வி.ஆர்.கண்டிகை, பீரகுப்பம், பிச்சாட்டூர் உள்ளிட்ட, தமிழக எல்லை அருகில், 10க்கும் மேற்பட்ட இடங்களில் சவுடு மண் குவாரிகள் இயங்கி வருகின்றன.

அங்கிருந்து, தமிழகத்திற்கு சவுடு மண் கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு வரும் சவுடு மண் லாரிகளில், பெரும்பாலானவை போலி ரசீது வாயிலாக மண் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றன.

இதனால், ஆந்திரா மற்றும் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், மண் கடத்தல் சம்பவமும் தாராளமாக நடந்து வருகிறது.

குறிப்பாக, திருத்தணி, பொன்பாடி, ஊத்துக்கோட்டை, எளாவூர் ஆந்திர - தமிழக சோதனைச்சாவடிகள் வழியாகவும், கே.கே.சத்திரம், சத்தியவேடு, பென்னலுார்பேட்டை ஆகிய ஆந்திர மாநில எல்லைகள் வழியாகவும், ஆந்திர மண் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, இரண்டு மாதங்களாகியும், திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக சவுடு மண் குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

சவுடு மண் குவாரிகளுக்கு அனுமதி கேட்டு, மாவட்ட கனிமவளத்துறை அலுவலகத்தில் பெறப்பட்ட பல்வேறு விண்ணப்பங்களும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழக புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநர் பிரபுசங்கர், நேற்று முன்தினம் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் கவிதா முன்னிலையில், குவாரிகளின் செயல்பாடுகள் தொடர்பான கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றார்.

அதில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் மாநில நெடுஞ்சாலை திட்டங்கள் தொடர்பான விண்ணப்பங்கள், செங்கல் சூளைகள் தொடர்பான விண்ணப்பங்களின் தற்போதைய நிலை குறித்து ஆலோசனை நடத்தினார்.

ஊத்துக்கோட்டை வட்டம், குஞ்சரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் சவுடு மண் குவாரி, பொன்பாடி சோதனைச்சாவடியில், சவுடு மண் லாரிகளை ஆய்வு செய்து வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இந்துபாலா, கனிமவள உதவி இயக்குநர் சிவப்ரியா உட்பட பலர் பங்கேற்றனர்.

தலை கவிழ்ந்திருந்த 'கேமரா' திருத்தணி, பொன்பாடி சோதனைச்சாவடியில், சுரங்கத்துறை இயக்குநர் பிரபுசங்கர், கலெக்டர் கவிதாவுடன் நேற்று முன்தினம் இரவு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சோதனைச்சாவடி மையம் அருகில், சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா, தரையை பார்த்தபடி கவிழ்ந்திருந்தது. அதைக் கண்ட இயக்குநர் பிரபுசங்கர், 'தரையைப் பார்த்தபடி கேமரா இருப்பதால் என்ன பயன்?' என, கிண்டலாக கேட்க, சமாளிக்க முடியாமல் அங்கிருந்த போலீசார் திணறினர். பின், 'சாலையை பார்த்தபடி கண்காணிப்பு கேமராவை பொருத்துங்கள். லாரிகளில் அதிக லோடு ஏற்றி வருவதும் விதிமீறல் தான். அதை முறையாக கண்காணித்து, அபராதம் விதியுங்கள். தேவைப்பட்டால், உங்கள் எஸ்.பி.,யிடம் தகவல் தெரிவித்து, கூடுதல் போலீசாரை நியமித்துக் கொள்ளுங்கள்' என, அறிவுறுத்தினார்.



சென்னை உதவி புவியியலாளர் தலைமையில் கண்காணிப்பு குழு சென்னை புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் பிரபுசங்கர் கூறியதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில், ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள சோதனைச்சாவடிகளில், சென்னை தலைமையக உதவி புவியலாளர் தலைமையில், தனி கண்காணிப்பு குழு நியமிக்கப்பட்டு உள்ளது. அந்த சிறப்பு குழுவினர், 24 மணி நேரமும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும், 250 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. உரிய அனுமதிச்சீட்டு இல்லாமலும், எடை அதிகமாக கொண்டு வரப்பட்டதாலும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, காவல் துறை நடவடிக்கைக்காக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து சோதனைச் சாவடிகளிலும், 'ஏஎன்பிஆர்' கேமரா, 'சிசிடிவி' கணிகாணிப்பு கேமரா மற்றும் மேலும் சில உயர் தொழில்நுட்ப முயற்சிகளை மேற்கொண்டு, கண்காணிப்பை பலப்படுத்த, மாவட்ட நிர்வாகத்திடம் ஆலோசனை மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us