ADDED : ஆக 30, 2026 07:33 PM
ஊத்துக்கோட்டை: ஆடி மாதம் துவங்கி ஏழாவது ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பவானியம்மன் கோவிலில் குவிந்தனர்.
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில், பெரியபாளையம் பவானியம்மன் கோவில் முக்கியமானது. இங்கு நடைபெறும் விழாக்களில், ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, 14 வாரங்கள் சிறப்பு பூஜை நடைபெறும்.
நேற்று ஆடி மாத விழா தொடங்கி, ஏழாவது ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் பொங்கல் வைத்தும், வேப்ப இலை ஆடை அணிந்தும் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
அதிகளவு பக்தர்கள் குவிந்ததால், நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். ஊத்துக்கோட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக, ஆந்திராவில் இருந்து வந்த கனரக வாகனங்கள் ஊத்துக்கோட்டையில் இருந்து சத்தியவேடு, திருவள்ளூர் சாலை மார்க்கத்தில் திருப்பி விடப்பட்டன.
