UPDATED : ஜூலை 15, 2026 08:57 PM
ADDED : ஜூலை 15, 2026 08:52 PM
பொன்னேரி:பொன்னேரி அருகே, குடும்ப தகராறில், குடிபோதையில் மனைவியை தீயிட்டு எரித்த கணவனை, போலீசார் கைது செய்தனர்.
பொன்னேரி அடுத்த முஸ்லிம் நகரை சேர்ந்தவர் நிசார், 23. ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி ஜுபைதா, 21. மூன்று ஆண்டுகளுக்கு முன், இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களுக்கு, 2 வயதில் பெண் குழந்தையும், ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். குடி பழக்கத்தால் சரியாக தொழிலுக்கு செல்லாமல் நிசார் இருந்ததால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
ஜூலை 14 இரவு, மது போதையில் வீட்டிற்கு வந்த நிசாருக்கும், ஜுபைதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மது போதையில் இருந்த நிசார், ஒரு கட்டத்தில், மனைவி மீது மண்ணெண்ணய் ஊற்றி தீயிட்டு கொளுத்தி, வீட்டை விட்டு வெளியேறினார்.
ஜுபைதாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், பலத்த தீக்காயங்களுடன் அவரை மீட்டனர். ஆபத்தான நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வழக்கு பதிந்த பொன்னேரி போலீசார், நிசாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
