/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராந்தக சோழன் கால கல்வெட்டு சிறுவாபுரியில் கண்டெடுப்பு
/
பராந்தக சோழன் கால கல்வெட்டு சிறுவாபுரியில் கண்டெடுப்பு
பராந்தக சோழன் கால கல்வெட்டு சிறுவாபுரியில் கண்டெடுப்பு
பராந்தக சோழன் கால கல்வெட்டு சிறுவாபுரியில் கண்டெடுப்பு
ADDED : ஜன 29, 2025 01:12 AM

சென்னை:திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில், பராந்தக சோழன் காலத்தை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வரலாற்று ஆய்வாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் கோவிந்த் அளித்த தகவலை அடுத்து, மதுரை வீரன், பூபதி, வடிவேல் ஆகியோர், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி ஒன்றியம், சிறுவாபுரி பகுதியில் களமேற்பரப்பு ஆய்வு செய்தனர்.
விஷ்ணு கிரகம்
அப்போது, சிறுவாபுரி அருகிலுள்ள ஆமேதநல்லுார் கிராம நிர்வாக அலுவலகத்தின் வாசலில், மண்ணில் புதைந்த நிலையில், 5 அடி உயரம், 4 அடி அகலம் உள்ள பலகைக் கல்வெட்டு இருந்ததை அறிந்தனர். அதை சுத்தப்படுத்திய போது, பராந்தக சோழனின், 17வது ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டது என்பது தெரியவந்தது.
பையூர் கோட்டத்துக்கு உட்பட்ட சிறுவரம்பேடு, கோகோநென்மலி உள்ளிட்ட பகுதிகள், ஆமேதநல்லுார் விஷ்ணுகிரகம் என்று அழைக்கப்பட்டதாகவும், அதை, ஆமேதநல்லுார் எனும் ஸ்ரீ சங்கரபாடி விஷ்ணுகிரகம் என்ற பெயராக, ஊர் சபையினர் கூடி மாற்றியதாகவும், கல்வெட்டில் தகவல் உள்ளது.
'இந்த பெயரை பாதுகாத்து வருபவர்களின் திருப்பாதங்கள், எங்கள் தலை மீது' என்று, கல்வெட்டு செய்தி முடிகிறது.
இதுகுறித்து, வரலாற்று ஆய்வாளர்கள் சங்கத்தின் ஆலோசகர் விழுப்புரம் வீரராகவன் கூறியதாவது:
'மேத' என்பதற்கு பலியிடுதல் என்று பொருள். ஆமேத என்றால், பலியிடப்படாத என்று பொருள். அதாவது, இந்த பகுதியில் சமண, வைணவர்கள் அதிகமிருந்ததால், மற்றவர்களும் சமய நல்லிணக்கத்துக்காக, கோவில்களில் பலியிடுவதில்லை என, முடிவெடுத்ததற்கு ஆதாரமாக, இந்த கல்வெட்டு உள்ளது.
பராந்தக சோழன், 907 முதல் 955 வரை ஆட்சி செய்தார். இந்த கல்வெட்டு அவருடைய, 17வது ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டு உள்ளதால், இது, 924ல் பொறிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த கல்வெட்டு, 1100 ஆண்டுகள் பழமையானது. இதில், பராந்தக சோழினின் மெய்க்கீர்த்தியான, 'மதிரை கொண்ட கோப்பர கேசரி' என்பதற்கு பதிலாக, 'மருதை' கொண்ட கோப்பர கேசரி என பொறிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
வணிக நகரம்
இச்சங்கத்தின் தலைவர் மணியன் கலியமூர்த்தி கூறுகையில், ''இந்த கல்வெட்டால், 10ம் நுாற்றாண்டில், இந்த ஊர் சிறப்பாக இருந்ததையும், சிறுவாபுரியில் சமணர்களின் 23வது தீர்த்தங்கரரான பார்சுவநாதர் சிற்பம் தற்போதும் வழிபாட்டில் உள்ளதும், இந்த ஊரின் பெயருக்கு கூடுதல் ஆதாரமாக உள்ளது.
மேலும், பிற்காலத்தில் கிடைத்த கல்வெட்டுகளின் வாயிலாக, இப்பகுதி பெரிய வணிக நகரமாக இருந்ததையும் அறிய முடிகிறது,'' என்றார்.

