புதிய பஸ் நிலைய பணிகள் விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
புதிய பஸ் நிலைய பணிகள் விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
ADDED : பிப் 01, 2026 06:39 AM
திருத்தணி: திருத்தணியில், 20 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய பணிகளை, 15ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என, நகராட்சி நிர்வாக துறை இயக்குநர் மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டார்.
திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை அருகே நகராட்சி நிர்வாகம் சார்பில், 20 கோடி ரூபாய் மதிப்பில் புதிய நவீன பேருந்து நிலையம் கட்டும் பணிகள், நடந்து வருகின்றன.
தற்போது, பேருந்து நிலைய பணிகள், 95 சதவீதம் முடிந்த நிலையில், தரைத்தளம் கான்கீரிட் போடும் பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று நகராட்சி நிர்வாகத் துறை இயக்குநர் மதுசூதன்ரெட்டி, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் ஆகியோர் புதிய பேருந்து நிலைய பணிகளை ஆய்வு செய்தனர். அப்போது, புதிய பேருந்து நிலையத்தில், பயணியருக்கு ஏற்படுத்தப்படும் வசதிகள், பேருந்துகள் நிறுத்தும் வசதிகள் குறித்து இயக்குநர், நகராட்சி ஆணையர், பொறியாளரிடம் கேட்டறிந்தார்.
பின், திருத்தணி பழைய பேருந்து நிலையத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து மதுசூதன் ரெட்டி, நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரிடம், புதிய பேருந்து நிலைய பணிகளை வரும், 15ம் தேதிக்குள் முடித்து தயாராக இருக்க வேண்டும் என, உத்தரவிட்டார்.
ஆய்வின் போது, திருத்தணி நகராட்சி ஆணையர் சரவணகுமார், உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
