/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் சரக்கு ரயில் தீ விபத்து 16 பேரிடம் விசாரணை துவக்கம்
/
திருவள்ளூரில் சரக்கு ரயில் தீ விபத்து 16 பேரிடம் விசாரணை துவக்கம்
திருவள்ளூரில் சரக்கு ரயில் தீ விபத்து 16 பேரிடம் விசாரணை துவக்கம்
திருவள்ளூரில் சரக்கு ரயில் தீ விபத்து 16 பேரிடம் விசாரணை துவக்கம்
ADDED : ஜூலை 15, 2025 09:25 PM
சென்னை:சரக்கு ரயில் தீ விபத்து குறித்து, 16 பேரிடம், தெற்கு ரயில்வே அமைத்த நான்கு பேர் கொண்ட குழு, விசாரணையை துவக்கியது.
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே, டீசல் ஏற்றி 50 டேங்கர்களுடன் சென்ற சரக்கு ரயில், கடந்த 13ம் தேதி அதிகாலை, தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு, 18 டேங்கர்கள் எரிந்து நாசமாகின.
அதனால், சென்ட்ரல் -- அரக்கோணம் வழித்தடத்தில், ரயில் சேவை பாதிக்கப்பட்டது. சேதமடைந்த ரயில் தண்டவாளம், உயர்நிலை மின் பாதை, மின் கம்பங்கள் ஆகியவை, அடுத்த இரண்டு நாட்களில் முழுமையாக சீரமைக்கப்பட்டன.
இந்த தடத்தில், நேற்று காலை முதல், மின்சார, விரைவு ரயில்கள் வழக்கம் போல் இயங்குகின்றன.
இந்த தீ விபத்து குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க, ஒருங்கிணைப்பாளர் நிதின் நோர்பர்ட் உட்பட நான்கு பேர் கொண்ட குழுவை, தெற்கு ரயில்வே அமைத்திருந்தது. இதைத் தொடர்ந்து, விபத்து குறித்து விசாரிக்க, 16 பேருக்கு நேற்று முன்தினம் அழைப்பு விடுக்கப்பட்டது.
சென்னை ரயில்வே கோட்டத்தில், பாதுகாப்பு துறை அலுவலகத்தில், அவர்களிடம் நேற்று விசாரணை துவங்கியது. சரக்கு ரயில் ஓட்டுநர், உதவி ஓட்டுநர், ரயில் நிலைய மேலாளர், மங்களூரு -- சென்னை விரைவு ரயில் ஓட்டுநர், உதவி ஓட்டுநர், ரயில் மேலாளர், திருவள்ளூர் நிலையத்தின் நிலைய அதிகாரி, பாய்ன்ட் மேன் ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.
அதுமட்டுமின்றி, விபத்து நேரத்தில் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படையினர், தமிழக ரயில்வே போலீசார், மூத்த பொறியாளர், எண்ணெய் நிறுவன வணிக மேற்பார்வையாளர், ரயில்வே பொறியாளர் உட்பட 16 பேரிடம், விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த விசாரணை, இரண்டு நாட்கள் நடக்கும். அப்போது, தீ விபத்துக்கான காரணம், விபத்துக்கு முன்பாக ரயில் தண்டவாளம், சிக்னல் ஆகியவற்றின் நிலை குறித்து, ரயில் ஓட்டுநர், நிலைய அதிகாரியிடம் விசாரணை நடத்தப்படும்.
மேலும், இனி வரும் காலங்களில், இது போன்ற விபத்துகளை தடுப்பது குறித்து அறிக்கை தயாரிக்கப்படும் என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.