ADDED : ஜூலை 10, 2025 02:14 AM
திருவள்ளூர்:மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து நேற்று, நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக, திருவள்ளூர் டோல்கேட் அருகில், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர், எட்டு அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில், ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், நாடு முழுதும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். எட்டாவது ஊதிய குழுவை அமல்படுத்த வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட, எட்டு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, நிர்வாகிகள் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
திருத்தணி
திருத்தணி கமலா தியேட்டர் அருகே மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் அப்சல் அகமத் தலைமையில் நடந்த போராட்டத்தில், 34 பெண்கள் உள்பட 64 பேர் பங்கேற்றனர்.
தொழிலாளர் விரோத சட்டங்களை நீக்க வேண்டும், நுாறு நாள் வேலைக்கு நிதி வழங்க வேண்டும், ஒரு டன் கரும்புக்கு, 5,500 ரூபாய் விலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி மறியலில் ஈடுபட்டனர். திருத்தணி போலீசார், 64 பேரை கைது செய்தனர். மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
ஊத்துக்கோட்டை
பெட்ரோல், டீசல் விலையேற்றம், காஸ் சிலிண்டர் மானியம் நிறுத்தி வைப்பு உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாடு முழுதும் போராட்டம் நடந்தது.
பெரியபாளையத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்ட பொருளாளர் கங்காதரன் தலைமை வகித்தார்.
இது தொடர்பாக, 25 பெண்கள் உட்பட 78 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல், கன்னிகைப்பேர் கிராமத்தில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில், 75 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.