/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஜெ.ஜெ., கார்டனில் தேங்கிய மழைநீரால் நோய் அபாயம்
/
ஜெ.ஜெ., கார்டனில் தேங்கிய மழைநீரால் நோய் அபாயம்
ADDED : டிச 18, 2024 08:33 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் வட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுவானுார் கண்டிகை கிராமத்தில், ஜெ.ஜெ.,கார்டன் குடியிருப்பு பகுதி உள்ளது. திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில், ஐ.சி.எம்.ஆர்., அருகில் அமைந்துள்ள இந்த நகரில், 100க்கும் மேற்பட்டோர் வீடுகள் கட்டி குடிபெயர்ந்துள்ளனர். மேலும், பல வீடுகள் இங்கு கட்டப்பட்டு வருகிறது.
சிறுவானுார் கண்டிகை ஊராட்சிக்கு உட்பட்ட இந்த நகரில், அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. சாலை வசதி இல்லாததால், மழை காலத்தில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி, நீச்சல் குளம் போல் காட்சியளிக்கிறது.
ஒரு மாதமாக பெய்து வரும் தொடர் மழையால், இக்குடியிருப்பு முழுதும் தண்ணீர் தேங்கி உள்ளது. ஊராட்சி நிர்வாகம் கடந்த வாரம், பொக்லைன் இயந்திரம் வழியாக பள்ளம் தோண்டி தண்ணீரை வெளியேற்ற வசதி ஏற்படுத்தியது.
இருப்பினும், முழுதும் தண்ணீர் வடியாததால், மழைநீர் குளமாக தேங்கி உள்ளது. இதனால், கொசு உற்பத்தியாக நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், இரவு நேரத்தில், விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகம் உள்ளது.
எனவே, திருவள்ளூர் கலெக்டர் ஜெ.ஜெ., கார்டனில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடியிருப்புவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.