கடம்பத்துார் ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் நிறுத்த:ம்: தளவாட பொருட்களை எடுத்து சென்ற ஒப்பந்ததாரர்; 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் , பயணியர் அதிர்ச்சி
கடம்பத்துார் ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் நிறுத்த:ம்: தளவாட பொருட்களை எடுத்து சென்ற ஒப்பந்ததாரர்; 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் , பயணியர் அதிர்ச்சி
UPDATED : ஆக 21, 2026 04:31 AM
ADDED : ஆக 20, 2026 06:52 PM

கடம்பத்துார்: கடம்பத்துார் ரயில் நிலையத்தில், 5.50 கோடி ரூபாய் மதிப்பில், கடந்த 2022ம் ஆண்டு தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டிருந்த சுரங்கப்பாதை அமைக்கும் பணி, பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. நேற்று, சுரங்கப்பாதை கட்டுமான பணிகளுக்கான தளவாட பொருட்களை, ஒப்பந்ததாரர் பணித்தளத்திலிருந்து லாரிகளில் எடுத்து சென்றார். அதனால், கடம்பத்துார் மற்றும் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மற்றும் ரயில் பயணியர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் அமைந்துள்ளது கடம்பத்துார் ரயில் நிலையம். இங்கு, கடவுப்பாதை அடிக்கடி மூடப்படுவதால், கடம்பத்துார் மற்றும் சுற்றியுள்ள, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்த பொதுமக்களின் வேண்டுகோளின்படி, இப்பகுதியில், கடந்த 2015ம் ஆண்டு, 14.5 கோடி ரூபாய் மதிப்பில், புதிய ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி துவங்கப்பட்டது.
மந்தகதியில் நடந்து வந்த மேம்பால பணிகள், ஆறு ஆண்டுகளுக்கு பின் நிறைவடைந்து, கடந்த 2022ம் ஆண்டு முதல் பயன்பாட்டிற்கு வந்தது.
அதன்பின், கடவுப்பாதை நிரந்தரமாக மூடப்பட்டதால், அப்பகுதி மக்கள் கடவுப்பாதையை கடந்து செல்ல அவதிப்பட்டு வந்தனர்.
இதையடுத்து, கடந்த 2022ம் ஆண்டு, டிசம்பரில், 5.50 கோடி ரூபாய் மதிப்பில், 300 அடி நீளம், 16 அடி அகலம், 9 அடி உயரத்தில், சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
ஆறு மாதங்களில் பணிகளை முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டது. ஆனால், பணிகள் தொடங்கி நான்கு ஆண்டுகளாகியும், இதுவரை எவ்வித பணிகளும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த 2026, மார்ச் 20ம் தேதி, தென்னக ரயில்வே துறை உத்தரவுப்படி, திட்டப்பணிகள் கூடுதல் கோட்ட பொறியாளர் சீனிவாசன், கடம்பத்துாரில் அமைக்கப்பட இருந்த சுரங்கப்பாதை பணிகளை தொடங்கி வைத்தார்.
மூன்று மாதங்களில் முடிக்க திட்டமிட்டு பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், ஒரு மாதம் மட்டும் பணிகள் நடந்து வந்தன.
தற்போது, கடந்த ஐந்து மாதங்களாக எவ்வித பணிகளும் நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இது, ரயில் பயணியர் மற்றும் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சுங்கப்பாதை பணிகளுக்கு கொண்டு வரப்பட்ட இரும்பு தளவாட பொருட்களை, பணித்தளத்தில் இருந்து திரும்ப கொண்டு செல்லும் பணிகளை, ஒப்பந்ததாரர் மேற்கொண்டார்.
இதுகுறித்து, ஒப்பந்த நிறுவனத்தினர் கூறியதாவது:
தென்னக ரயில்வே துறையிடமிருந்து, சுரங்கப்பாதை பணிகளை தொடங்குவது குறித்து, முறையான அறிவிப்பு இன்னும் வரவில்லை.
இதனால், பூஜை போட்டு பணிகளை தொடங்கிய நாளிலிருந்து, எங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதோடு, பொருட்களும் வீணாகி வருகின்றன. இதனால், நாங்கள் தளவாட பொருட்களை திரும்ப எடுத்து செல்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
