/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குப்பை கொட்டும் இடமான கொசஸ்தலை ஆறு
/
குப்பை கொட்டும் இடமான கொசஸ்தலை ஆறு
ADDED : ஜன 01, 2025 12:29 AM

திருவாலங்காடு, திருவாலங்காடு ஒன்றியம், கனகம்மாசத்திரம் ஊராட்சியில், 20,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு சேகரமாகும் குப்பை, இறைச்சி கழிவுகள் வி.ஜி.கே.புரம் கொசஸ்தலை ஆற்றில் திருவாலங்காடு சாலையில், பழைய தரைப்பாலம் அருகே கொட்டப்படுகின்றன.
இதனால் கொசஸ்தலை ஆறு மாசடையும் நிலையில் உள்ளதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து குப்பை கொட்டப்பட்டால் நீரோட்டம் பாதிக்கப்படுவதுடன் நீரின் சுவை, நிறம் மாறும் அபாயம் உள்ளது என, சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கனகம்மாசத்திரம் பகுதியைச் சேர்ந்த குமரேசன் கூறியதாவது:
ஆற்றின் நீர்வழித் தடத்திலே டிராக்டர் வாயிலாக கொண்டு வந்து குப்பை, கழிவை கொட்டி செல்கின்றனர்.
கேட்டால் மிரட்டல் விடுக்கின்றனர். இதே நிலை நீடித்தால், கொசஸ்தலை ஆறு, கூவம் போன்று அசுத்தம் நிறைந்த ஆறாக மாறும் அபாய நிலை உள்ளது.
இதுகுறித்து திருவள்ளூர் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, திருவள்ளூர் நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கூறி, ஆற்று வழித்தடத்தில் குப்பை கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

