/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு தடை அனுமதி பெற்று இயக்க 'நோட்டீஸ்'
/
கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு தடை அனுமதி பெற்று இயக்க 'நோட்டீஸ்'
கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு தடை அனுமதி பெற்று இயக்க 'நோட்டீஸ்'
கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு தடை அனுமதி பெற்று இயக்க 'நோட்டீஸ்'
ADDED : ஜன 15, 2025 11:51 PM

திருப்போரூர்,செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கோவளத்தில், தனியார் நிறுவனம் சார்பில், கடந்த 2023-ம் ஆண்டு ஹெலிகாப்டர் சவாரி சுற்றுலா துவக்கப்பட்டது. பின்னர் திடீரென நிறுத்தப்பட்டது. கடந்த 10ம் தேதி மீண்டும் துவங்கியது. நபர் ஒருவருக்கு 6,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
ஹெலிகாப்டரில் 5 நிமிடம் பறந்து, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இயற்கை காட்சிகளை, கழுகு பார்வையில் மக்கள் கண்டுகளித்தனர்.
இந்நிலையில், ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு, முறையான அனுமதி பெறவில்லை என, குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி, மாவட்ட கலெக்டருக்கு கடிதம் அனுப்பினார்.
அதில் கூறியிருப்பதாவது:
கோவளத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடத்தும் தனியார் நிறுவனம், மத்திய விமான போக்குவரத்து ஆணையத்தின் அனுமதி பெறவில்லை. இப்பகுதியில் ஹெலிகாப்டர் இயக்க, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது, காவல் துறை, வருவாய் துறை, மாவட்ட நிர்வாகம் என, யாரிடமும் அனுமதி பெறவில்லை என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹெலிகாப்டர்களை இயக்க, பல வரையறைகள் உள்ளன. காலமுறை பராமரிப்பு, அவற்றை இயக்குவதற்கான விமானிகள் தகுதி போன்றவை உறுதி செய்யப்படவில்லை. இது மக்களின் உயிரை பணயம் வைப்பதாகும்.
இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவின்படி, நேற்று மதியம் 1:00 மணி அளவில், திருப்போரூர் தாசில்தார் நடராஜன் தலைமையில், வருவாய் துறை அதிகாரிகள், கோவளம் ஹெலிகாப்டர் தளத்திற்கு சென்று 'சீல்' வைத்தனர். அதன் அலுவலகத்தில் அறிவிப்பு 'நோட்டீஸ்' ஒன்றையும் ஒட்டினர்.
இது குறித்து, திருப்போரூர் தாசில்தார் நடராஜன் கூறுகையில், ''மாவட்ட நிர்வாக அனுமதி ஏதும் பெறப்படவில்லை. பொதுமக்களை ஏற்றி செல்லும்போது ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், அதற்கு மாவட்ட நிர்வாகம் பொறுப்பாகும். எனவே, மாவட்ட நிர்வாக உத்தரவின்படி 'சீல்' வைக்கப்பட்டது. ஆனால், ஹெலிகாப்டர் இயக்கும் நிர்வாகத்தினர் அனுமதி பெற்று இருப்பதாக கூறுகின்றனர். அவ்வாறு அனுமதி பெற்று இருந்தால், அதை காண்பியுங்கள் எனக் கூறியிருக்கிறோம்,'' என்றார்.

