/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கடமஞ்சேரியில் குளம் புதர்மண்டி வீண்
/
கடமஞ்சேரியில் குளம் புதர்மண்டி வீண்
ADDED : அக் 14, 2024 06:12 AM

பொன்னேரி : பொன்னேரி அடுத்த கடமஞ்சேரி கிராமத்தில், நான்கு ஏக்கர் பரப்பில், ஊர் பொதுக்குளம் ஒன்று பராமரிப்பு இன்றி கிடக்கிறது. குளம் முழுதும் கோரைப்புற்கள், முள்செடிகள் சூழ்ந்து கிடக்கின்றன.
மேற்கண்ட கிராமத்தில் நிலத்தடி நீர் உவர்ப்பாக உள்ளதால் ஆழ்துளை கிணறுகள் வாயிலாக கிடைக்கும் தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்த முடியாது. இதற்காக, எட்டு கி.மீ., தொலைவில் உள்ள சிறுவாக்கம் கிராமத்தில் இருந்து குடிநீர் கொண்டு வரப்பட்டு, வினியோகிக்கப்படுகிறது.
அது போதுமானதாக இல்லாத நிலையில், கிராமவாசிகள் பல்வேறு தேவைகளுக்கு இந்த குளத்து நீரை பயன்படுத்தி வந்தனர். கால்நடைகளின் குடிநீர் ஆதாரமாகவும் இது இருந்தது. தற்போது குளம் புதர் மண்டி பாழாகி வருவதால், அதில் தேங்கும் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
மேலும் குளத்திற்கு வரும் நீர் உள்வாங்கி பகுதி, அங்கு சாலை பணிகள் மேற்கொள்ளும்போது மூடப்பட்டுவிட்டது. இதனால் அருகில் உள்ள அம்மனேரியின் உபரிநீர் குளத்திற்கு வருவதும் தடைபட்டு உள்ளது.
குளத்தில் தண்ணீர் தேக்கி வைக்கப்படுவதால் நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட்டு வந்ததாகவும், தற்போது அதற்கு வாய்ப்பில்லாத நிலையில், அருகில் உள்ள விவசாய நிலங்களில் ஆழ்துளை கிணறுகளில் கிடைக்கும் தண்ணீரில் உவர்ப்புத்தன்மை மேலும் அதிகரித்து உள்ளதாகவும் விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
நிலத்தடி நீர் பாதுகாப்பு, கிராமவாசிகளின் தண்ணீர் தேவை, கால்நடைகளின் குடிநீர் ஆதாரம் ஆகியவை கேள்விக்குறியாகி வரும் நிலையில், உடனடியாக குளத்தை சீரமைக்க மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.