ADDED : நவ 28, 2026 10:35 PM
பொன்னேரி: பொன்னேரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளி, திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொன்னேரியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதில்,தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன், 57, என்பவர் இன்று (நவ.,28), வேண்பாக்கம் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, திடீரென வாந்தி எடுத்து மயக்கமடைந்து விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, மருத்துவர்கள் பரிசோதனையில், முருகன் ஏற்கனவே உயிரிந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்த பொன்னேரி போலீசார், முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, அதே மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கிற்கு அனுப்பினர்.
பாதாள சாக்கடை திட்ட பணியின்போது, தொழிலாளி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொன்னேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
