ADDED : அக் 17, 2025 07:43 PM
பொன்னேரி: அம்மிக்கல்லால் அண்ணனை தாக்கி கொலை செய்த தம்பிக்கு, பொன்னேரி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
சென்னை, எண்ணுார் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், 35; பெயின்டர். இவரது தம்பி ராஜேஷ், 33; கூலித்தொழிலாளி. சுரேஷ் தினமும் குடித்து விட்டு தம்பியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால், இருவருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது.
கடந்த 2021 மார்ச் 10ல், குடிபோதையில் துாங்கிக் கொண்டிருந்த சுரேஷின் தலையில், ராஜேஷ் அம்மிக்கல்லை போட்டார். இதில், படுகாயமடைந்த சுரேஷ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 10 நாட்களுக்கு பின் உயிரிழந்தார்.
ராஜேஷை கைது செய்த எண்ணுார் போலீசார், அவரை சிறையில் அடைத்தனர். பொன்னேரி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. நேற்று முன்தினம், ராஜேஷிற்கு ஆயுள் தண்டனை விதித்து, நீதிபதி சிவகுமார் தீர்ப்பளித்தார்.