சுமை துாக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் ரேஷன் பொருள் வினியோகம் பாதிப்பு
சுமை துாக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் ரேஷன் பொருள் வினியோகம் பாதிப்பு
ADDED : ஆக 18, 2026 09:32 PM
கும்மிடிப்பூண்டி, ஆக. 19–
கவரைப்பேட்டை அருகே நுகர்பொருள் வாணிப கழக கிடங்கின் சுமை துாக்கும் தொழிலாளர்கள், வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்ததால், அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
கவரைப்பேட்டை அடுத்த பஞ்செட்டி பகுதியில், தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு உள்ளது. அந்த கிடங்கில் வேலை பார்த்து வரும், 30 சுமை துாக்கும் தொழிலாளர்கள் மூலம், தினசரி 10 லாரிகளில் ரேஷன் பொருட்களும், இரண்டு லாரிகளில் சத்துணவுக்கு தேவையான பொருட்களும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த கிடங்கில் வேலை பார்த்து வரும் சுமை துாக்கும் தொழிலாளர்கள், நேற்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
கூலி உயர்வு, அதிக சலுகைகள் பெறக்கூடிய பச்சை அட்டை, சங்க தேர்தல் நடத்த வேண்டும், வருகை பதிவேட்டில் அனைவரது பெயரையும் ஏற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி, தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களின் இந்த போராட்டத்தால், ரேஷன் கடை மற்றும் சத்துணவு கூடங்களுக்கு செல்ல வேண்டிய அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டு, தட்டுப்பாடு நிலவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
திருத்தணி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் பணியாற்றும், 50க்கும் மேற்பட்ட சுமை துாக்கும் தொழிலாளர்களும், அதே கோரிக்கைகளை முன்வைத்து, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
