/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முறைகேடாக கழிவுநீர் இணைப்பு கவுன்சிலரின் கணவர் அடாவடி வசூல்? பகுதிவாசிகள் குற்றச்சாட்டு
/
முறைகேடாக கழிவுநீர் இணைப்பு கவுன்சிலரின் கணவர் அடாவடி வசூல்? பகுதிவாசிகள் குற்றச்சாட்டு
முறைகேடாக கழிவுநீர் இணைப்பு கவுன்சிலரின் கணவர் அடாவடி வசூல்? பகுதிவாசிகள் குற்றச்சாட்டு
முறைகேடாக கழிவுநீர் இணைப்பு கவுன்சிலரின் கணவர் அடாவடி வசூல்? பகுதிவாசிகள் குற்றச்சாட்டு
ADDED : மே 24, 2025 02:37 AM

ஆவடி, ஆவடி மாநகராட்சி பருத்திப்பட்டு 47வது வார்டு, பாரதி நகர் முதல் குறுக்கு தெருவில் 10 வீடுகள் உள்ளன. இங்குள்ள ஒரு குடியிருப்பில் ஐந்து வீடுகள் உள்ளன. இங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சாலையில் பாய்கிறது. இதனால் மற்ற பகுதிவாசிகள் சாலையில் நடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர்களிடம், பலமுறை பேசியும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன் மாநகராட்சி அதிகாரிகளால், குறிப்பிட்ட வீடுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், நிரந்தர தீர்வு காணப்படவில்லை. இந்த நிலையில், சில தினங்களுக்கு முன் பெய்த மழை நீருடன் கழிவுநீர் கலந்து, சாலையில் தேங்கி கழிவுநீர் ஓடை போன்று காட்சியளிக்கிறது.
இந்த நிலையில், 'வீட்டிற்கு தலா 7,500 ரூபாய் மற்றும் கட்டுமானத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கி வழங்கினால், பாதாள சாக்கடை இணைப்பு உடனே வழங்கப்படும்' என, முறைகேடு இணைப்பிற்கு பணம் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து பகுதிவாசிகள் கூறியதாவது:
கழிவுநீர் பிரச்னையை சரி செய்து, பாதாள சாக்கடை இணைப்பு வழங்க வேண்டும். எங்களால் வெளியில் செல்ல முடியவில்லை. கழிவுநீருக்குள் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
தொற்றால், சிலர் மர்ம காய்ச்சலால் அவதிப்படுகின்றனர். இருந்தும், கழிவுநீர் வெளியேற்றுவதை சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் நிறுத்தவில்லை.
தேர்தலில் வெற்றி பெற்றபின், கவுன்சிலர் அழகு விஜயாவை யாரும் பார்த்ததில்லை. இது குறித்து புகார் அளித்தால், கவுன்சிலருக்கு பதிலாகஅவரது கணவர் வந்து, அவதுாறாக பேசி மிரட்டுகிறார். வீட்டிற்கு வீடு முறைகேடாக இணைப்பு வழங்க, தலா 7,500 ரூபாய் கேட்கிறார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த நிலையில், கழிவுநீர் பிரச்னை குறித்து கேட்ட ரேஷன் கடை ஊழியர் ஒருவரிடம் கவுன்சிலரின் கணவர் வின்சென்ட் அவதுாறாக பேசிய வீடியோ, சமூக வலைதளத்தில் வேகமாக பகிரப்படுகிறது.
அதில் 'நான் யார் என்று உனக்கு தெரியாது. ஒரு மாதத்திற்குள் உன்னை வேலையில் இருந்து நீக்கி, வீட்டில் உட்கார வைத்து விடுவேன்' என்று மிரட்டி உள்ளார்.
திட்டம் வரவில்லை
இப்பகுதிக்கு இன்னும் பாதாள சாக்கடை திட்டம் வரவில்லை, இதனால், நான் யாரிடமும் பணம் கேட்கவில்லை. திட்டம் வந்த பின் அனைத்து வீடுகளுக்கும் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படும்.
- அழகுவிஜயா
கவுன்சிலர்.
ஏமாறாதீர்!
பொதுமக்கள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாறக்கூடாது. பாதாள சாக்கடை திட்டத்திற்கான முழு பணத்தை கட்டினால், உடனே இணைப்பு வழங்கப்படும். இதற்கு டிபாசிட் தொகையாக 10,000 ரூபாய்; சாலை வெட்டு பணிக்கு 3,036 ரூபாய்; மேற்பார்வை மற்றும் பொருட்கள் 5,900 ரூபாய்; இதர செலவுகள் 600 ரூபாய் என, மொத்தம் 19,536 ரூபாய் வழங்க வேண்டும்.
- அதிகாரிகள்