குறைந்த மின்னழுத்த பிரச்னை :திருவாலங்காடில் விவசாயம் பாதிப்பு
குறைந்த மின்னழுத்த பிரச்னை :திருவாலங்காடில் விவசாயம் பாதிப்பு
ADDED : பிப் 14, 2026 05:16 AM
திருவாலங்காடு: திருவாலங்காடில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக, மின் மோட்டார்கள் இயங்காததால், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால், விவசாயத்தை விட்டு வெளியேறுவது மட்டுமே தீர்வு என, விவசாயிகள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
திருவாலங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட கூடல்வாடி பட்டரை ஏரி அருகேயும், அதை ஒட்டிய பகுதிகளில், 200 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.
இந்த கிராமத்தில், ஏரி நீர், திறந்தவெளி கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகள் மூலம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில், விவசாய நிலங்களின் அருகே, இரண்டு மின்மாற்றிகள் அமைத்து, அதன் மூலம் விவசாய மோட்டார்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அதே மின்மாற்றிகள் மூலம், அப்பகுதி குடியிருப்புகளுக்கும் மின் வினியோகம் செய்யப்படுகிறது. சில மாதங்களாக இப்பகுதி விவசாய நிலங்களுக்கு, குறைந்தழுத்த மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.
இதனால், மின் மோட்டார் மற்றும் வீட்டு மின்சாதன பொருட்கள் உள்ளிட்டவை பழுதடைந்து வருவதாகவும், புதிய மின் மோட்டார்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்க அதிக தொகை செலவிட வேண்டி உள்ளதாகவும், விவசாயிகள் மற்றும் அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்.
மேலும், குறைந்த மின்னழுத்தத்தால் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு சரியான நேரத்தில் நீர்பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து, திருவாலங்காடு விவசாயிகள் கூறியதாவது:
திருவாலங்காடு பகுதியில், 110 - 140 வோல்ட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. இதனால், மின் மோட்டார்கள் இயங்குவதில்லை.
குறைந்தது, 190 வோல்ட் கிடைத்தால் மட்டுமே மோட்டார் இயங்கும். இதே நிலை நீடித்தால், விவசாயத்தை விட்டு வெளியேறுவது மட்டுமே ஒரே வழி.
எனவே, மின்வாரிய அதிகாரிகள் மின்னழுத்த பிரச்னைக்கு உடனே தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
