/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குறைந்த மின்னழுத்த பிரச்னை திருநின்றவூரில் 2 மாதமாக அவதி
/
குறைந்த மின்னழுத்த பிரச்னை திருநின்றவூரில் 2 மாதமாக அவதி
குறைந்த மின்னழுத்த பிரச்னை திருநின்றவூரில் 2 மாதமாக அவதி
குறைந்த மின்னழுத்த பிரச்னை திருநின்றவூரில் 2 மாதமாக அவதி
ADDED : ஜூன் 01, 2025 09:13 PM
திருநின்றவூர்:திருநின்றவூரில் உள்ள துணைமின் நிலையத்தில் இருந்து, அன்னம்பேடு, கருணாகரச்சேரி, நெமிலிச்சேரி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளுக்கு, மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஊராட்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை பொறுத்தவரை, 15,000 மின் நுகர்வோர் உள்ளனர்.
இந்த நிலையில், அன்னம்மேடு, பெத்தேல் நகர், கருணாகரச்சேரி, ராமாபுரம், நெமிலிச்சேரி, பஜனை கோவில் தெரு, கோமதிபுரம் மற்றும் ராஜாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில், இரண்டு மாதமாக குறைந்த மின்னழுத்த பிரச்னை உள்ளது. தவிர, அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருவதால், பகுதிவாசிகள் கடும் மன உளைச்சலில் அவதியடைந்து வருகின்றனர்.
இது குறித்து, மின்வாரிய ஊழியர்களிடம் புகார் தெரிவித்தாலும் முறையாக பதில் அளிப்பதில்லை. மாறாக 'காற்றடிக்கும்போது, மின் வடத்தில் மரக்கிளைகள் உரசி மின்வெட்டு ஏற்பட்டிருக்கும். சீக்கிரம் வந்துவிடும்' என தெரிவிக்கின்றனர்.
திருநின்றவூர் துணைமின் நிலையத்தை பொறுத்தவரை, மின் பழுது சரிசெய்ய 15 ஊழியர்கள் இருக்க வேண்டும். ஆனால், மூன்று பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால், மின் பிரச்னையை உடனுக்குடன் சரிசெய்ய முடியவில்லை என கூறப்படுகிறது.
மின் வாரிய அதிகாரி கூறுகையில், 'திருநின்றவூர் துணை மின் நிலையத்தில், கூடுதலாக 8 எம்.வி.ஏ., திறன் உடைய மின் மாற்றி நிறுவும் பணி நடக்கிறது. பணி முடிந்ததும், மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். அதேபோல், 20, 30 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மின் வடங்களை மாற்றும் பணியும் நடந்து வருகிறது' என்றார்.
வீடுகளை பொறுத்தவரை, 220 வாட் திறன் உடைய சீரான மின்சாரம் வினியோகிப்பதை, அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மாதந்தோறும் போதிய ஊழியர்களை பணியமர்த்தி, பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும். அவற்றில் சிக்கல் ஏற்படும்போது தான், குறைந்த, உயரழுத்த பிரச்னையால், மின் சாதன பொருட்களில் பழுது ஏற்படுகின்றன.
- சடகோபன்,
சமூக ஆர்வலர், பட்டாபிராம்.