/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போலி ஆவணம் தயாரித்து நில மோசடி செய்தவர் கைது
/
போலி ஆவணம் தயாரித்து நில மோசடி செய்தவர் கைது
ADDED : ஜூலை 16, 2025 09:41 PM
மீஞ்சூர்:போலி ஆவணம் தயாரித்து நில மோசடி செய்தவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை மாதவரம் பால் பண்ணை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார், 45. இவரது தந்தை ஜெகதீசன் பெயரில், மீஞ்சூர் அடுத்த வாயலுார் கிராமத்தில், மனைப்பிரிவில், 1,241சதுர அடி பரப்பில், வீட்டுமனை உள்ளது.
கடந்த, 2018ல் ஜெகதீசன் இறந்தபின், அவரது வாரிசுகள் அனுபவத்தில் இருந்தது.
இந்நிலையில், கடந்த, 2021ம் ஆண்டு குடும்ப செலவினங்களுக்காக, விஜயகுமார் சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த யசோதா, என்பவரிடம், மேற்கண்ட வீட்டு மனை பத்திரத்தை வைத்து, 3 லட்சம் ரூபாய் கடன் பெற்றார்.
கடந்த, 2023 நவம்பரில் கடனை அசல் மற்றும் வட்டியுடன் திரும்ப செலுத்தினார். அசல் ஆவணத்தை யசோதாவிடம் கேட்டபோது, வீட்டில் எங்கோ வைத்து விட்டதாகவும், தேடி தருவதாகவும் கூறினார்.
ஆறு மாதங்களாக பத்திரத்தை தராமல் யசோதா அலைக்கழித்து வந்ததுடன், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். சந்தேகம் அடைந்த விஜயகுமார், நிலத்திற்கு வில்லங்க சான்று பெற்றார்.
அதில் யாசோதாவின் மகன் மேகநாதன் போலி ஆவணங்களை தயாரித்து, அதை அவரது மகன் சரவணன் பெயருக்கு பொன்னேரி சார் - பதிவாளர் அலுவலத்தில் பத்திர பதிவு செய்திருப்பது தெரிந்தது.
விஜயகுமார் இது தொடர்பாக ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார். புகாரின்படி போலீசார் விசாரணை நடத்தி சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

