ADDED : பிப் 22, 2026 05:38 AM

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட சுகாதார அலுவலகம் எதிரே, திறந்து கிடந்த வடிகால்வாயில் தவறி விழுந்தவர், மூச்சு திணறி பலியானார்.
திருவள்ளூர் மாவட்ட சுகாதார அலுவலகம், வடக்கு ராஜவீதியில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தின் முன், மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த மழைநீர் வடிகால்வாய் மூடி உடைந்து, திறந்த நிலையில் உள்ளது.
இந்நிலையில், வள்ளுவர்புரத்தைச் சேர்ந்த பாபு, 55, என்பவர், நேற்று காலை மழைநீர் வடிகால்வாயில் தவறி விழுந்தார்.
பின், மூச்சு திணறி பலியானார். தகவல் அறிந்து வந்த திருவள்ளூர் டவுன் போலீசார், அவரது சடலத்தை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நீண்ட நாட்களாக திறந்து கிடக்கும் வடிகால்வாயில், தற்போது ஒருவர் தவறி விழுந்த நிலையில், இனியாவது மூடி அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
