/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மெதுார் - பழவேற்காடு மின் பாதை பணி முடியாததால்...தொடரும் சிரமம்!:அடிக்கடி குறைந்தழுத்த மின்சாரம், துண்டிப்பால் அவதி
/
மெதுார் - பழவேற்காடு மின் பாதை பணி முடியாததால்...தொடரும் சிரமம்!:அடிக்கடி குறைந்தழுத்த மின்சாரம், துண்டிப்பால் அவதி
மெதுார் - பழவேற்காடு மின் பாதை பணி முடியாததால்...தொடரும் சிரமம்!:அடிக்கடி குறைந்தழுத்த மின்சாரம், துண்டிப்பால் அவதி
மெதுார் - பழவேற்காடு மின் பாதை பணி முடியாததால்...தொடரும் சிரமம்!:அடிக்கடி குறைந்தழுத்த மின்சாரம், துண்டிப்பால் அவதி
ADDED : பிப் 15, 2025 08:08 PM

பழவேற்காடு:மெதுார் - பழவேற்காடு இடையே, 10 கி.மீ., தொலைவிற்கான புதிய மின்வழித்தடம் அமைக்கும் பணி, நான்கு ஆண்டுகளாக முடியாமல் நீடிப்பதால், 30 மீனவ கிராமத்தினர், குறைந்தழுத்த, அடிக்கடி மின் துண்டிப்பால் அவதியுறுகின்றனர். எனவே, தடையில்லா மின்சாரத்திற்காக காத்திருக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு மீனவப் பகுதியில், 30க்கும் அதிகமான மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு, 10,500 மின்நுகர்வோர் உள்ளனர். இங்குள்ள குடியிருப்புகளுக்கு, பொன்னேரி அடுத்த, மெதுார் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது.
இதற்காக, காஞ்சிவாயல், திருப்பாலைவனம், போலாச்சியம்மன்குளம், ஆண்டார்மடம் ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் கழிமுகப் பகுதிகளில் மின்கம்பங்கள் அமைத்து, மின்சாரம் எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்த மின்வழித்தடம், 30 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட நிலையில் கம்பங்கள் சேதம் அடைந்தும், ஒயர்கள் உப்புபூத்தும் மோசமான நிலைய உள்ளன.
புயல் மழைக்காலத்தில் விவசாய நிலங்களில் உள்ள மின்கம்பங்கள் சாய்ந்தும், மின்ஒயர்கள் அறுந்தும் விழுகின்றன.
அதேபோன்று கழிமுகப் பகுதிகளில் உள்ள மின்கம்பங்களை மழைநீர் சூழ்ந்து விடுவதால், மின் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதிலும் சிரமம் ஏற்படுகிறது.
அச்சமயங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மின் வெட்டு நீடிப்பதால், மீனவ மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
காலாவதியான மின்ஒயர்களால் கோடைக்காலங்களிலும் சீரான மின்வினியோகம் வழங்க முடிவதில்லை. குறைந்த மின்அழுத்தம், அடிக்கடி மின்வெட்டு ஆகியவை ஏற்படுகிறது.
மீனவ கிராம மக்களின் தொடர் கோரிக்கையின் பயனாகவும் பழவேற்காடு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சீரான, தடையில்லாத மின்சாரம் வழங்குவதற்காகவும், 2021ல் புதிய மின்வழித்தடம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன.
மெதுார் - பழவேற்காடு மாநில நெடுஞ்சாலையின் ஒரங்களில் மின்கம்பங்கள் அமைத்து, 10 கி.மீ., தொலைவிற்கு புதிய மின்வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இப்பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படவில்லை. மின்கம்பங்கள், மினஒயர்கள் உள்ளிட்ட பொருட்கள் சிறிது சிறிதாக எடுத்து வரப்பட்டு, ஆமை வேகத்தில் நடைபெற்றன.
ஒரு சில இடங்களில் மின்கம்பங்கள் பதிக்கப்பட்டு, மின்ஒயர்கள் பொருத்தும் பணிகளும் அரைகுறையாக நடைபெற்றன. நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை புதிய மின்வழித்தடத்திற்கான பணிகள் நிறைவு பெறாமல் ஜவ்வாக நீடித்து வருகிறது.
புதிய மின்வழித்தடம் அமைந்தால், மழைக்காலங்களில் ஏற்படும் மின்துண்டிப்பிற்கும், கோடையில் ஏற்படும் மின்தட்டுப்பாடு, அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என, நம்பிக்கையில் இருந்த மீனவ மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
மின்வெட்டு, புயல் மழைக்காலங்களில் ஏற்படும் மின்துண்டிப்பு ஆகியவை தொடர்வதால், மீனவர்கள் மின்வாரியத்தின் மீது அதிருப்தியில் உள்ளனர்.
மேற்கண்ட புதிய மின்வழித்தடத்திற்கான பணிகளை துரிதப்படுத்திட வேண்டும் என மீனவர்கள் வலியறுத்தி உள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
மின்கம்பங்கள் அமைப்பது, அவற்றில் இரும்பு தளவாடங்களை பொருத்துவது, ஒயர்களை இணைப்பது என ஒவ்வொரு பணிக்கும் நீண்ட இடைவெளி இருந்தது. வருவாய் குறைவாக இருக்கும் பகுதி என்பதால் மின் வாரியத்தினர் கண்டுகொள்வதில்லை. இந்த ஆண்டாவது இதற்கு விமோசனம் கிடைக்குமா என தெரியவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மழைக்காலத்தில் புதிய மின்வழிதடத்திற்கான பணிகளை மேற்கொள்வதில் சிரமம் இருந்ததால் தாமதமாகிறது. பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டன. எஞ்சியுள்ள பணிகள் தற்போது துவங்கப்பட்டு உள்ளன.
இம்மாதம் இறுதிக்குள் பணிகளை முழுமையாக முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இதன் வாயிலாக மீனவ கிராமங்களில் கோடையில் மின்வெட்டு, குறைந்த மின்அழுத்தம் பிரச்னைகளுக்கு விரைவில் நிரந்தர தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.