/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தாமரை ஏரியால் கருமையாகும் உலோகங்கள்... அழிவின் ஆரம்பம் 2 கி.மீ., சுற்றளவில் நிலத்தடி நீர் கடும் பாதிப்பு
/
தாமரை ஏரியால் கருமையாகும் உலோகங்கள்... அழிவின் ஆரம்பம் 2 கி.மீ., சுற்றளவில் நிலத்தடி நீர் கடும் பாதிப்பு
தாமரை ஏரியால் கருமையாகும் உலோகங்கள்... அழிவின் ஆரம்பம் 2 கி.மீ., சுற்றளவில் நிலத்தடி நீர் கடும் பாதிப்பு
தாமரை ஏரியால் கருமையாகும் உலோகங்கள்... அழிவின் ஆரம்பம் 2 கி.மீ., சுற்றளவில் நிலத்தடி நீர் கடும் பாதிப்பு
ADDED : நவ 12, 2025 09:50 PM

கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி தாமரை ஏரியில், ஐந்து ஆண்டுகளாக, தொழிற்சாலை மற்றும் டேங்கர் லாரிகளின் கழிவுநீர் தேங்கியுள்ள நிலையில், தற்போது கருமை நிற எண்ணெய் படலம் படர்ந்துள்ளது. இதனால், 2 கி.மீ., சுற்றளவில் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது. குடிப்பதை தவிர்த்து, இதர பயன்பாட்டிற்கு நிலத்தடி நீரை மக்கள் பயன்படுத்தி வந்த போதிலும், தங்கம், வெள்ளி, பித்தளை உள்ளிட்ட உலோகங்கள் கருமையாக மாறி வருவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். கும்மிடிப்பூண்டி நகரின் முக்கிய நீராதராமான, 48 ஏக்கர் தாமரை ஏரி, நீர்வளத்துறையின் பராமரிப்பில் உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் வரை மக்கள் பயன்பாட்டில் இருந்த ஏரி, தற்போது, நகரின் நிலத்தடி நீரை கடுமையாக பாதிக்கும் ஏரி என்ற அவப்பெயரை பெற்றுள்ளது.
ஏரியின் மேற்கு பகுதியில் உள்ள சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் மழைநீர் கால்வாய் வழியாக, தொழிற்சாலைகளின் கழிவுநீரும், டேங்கர் லாரியில் ஏற்றி வரப்படும் கழிவுநீரும் திறந்துவிடப்படுகிறது.
அவை, நேராக ஏரியில் கலப்பதால், ஐந்து ஆண்டுகளாக தாமரை ஏரியில் கழிவுநீர் மட்டுமே தேங்கியுள்ளது. ஏரியை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள், துர்நாற்றத்தை சகித்துக் கொள்ள முடியாத நிலையில், வேறு வழியின்றி வசித்து வருகின்றனர்.
மேலும், ஒவ்வொரு மழைக்காலங்களிலும், ஏரியில் உள்ள கழிவுநீர் நிரம்பி, கும்மிடிப்பூண்டி நகர் வழியாக, அடுத்தடுத்த கிராம பகுதிகளில் உள்ள ஏரிகளை சென்றடைகிறது. இதனால், பசான ஏரிகள் மாசடைந்து, கிராம மக்கள், விவசாயம், கால்நடைகள் பாதிக்கப்பட்டு வருகிறது.
தாமரை ஏரியை மீட்டெடுக்க வேண்டும் என, பலமுறை புகார் அளித்தும், இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏரியை பராமரிக்க வேண்டிய நீர்வளத்துறையும், கழிவுநீர் திறந்து விடுவதை தடுக்க வேண்டிய மாவட்ட சுற்றுச்சூழல் துறையும், கைகட்டி வேடிக்கை பார்ப்பதாக, இயற்கை ஆர்வலர்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.
இவர்கள் அலட்சியத்தின் உச்சத்தை வெளிப்படுத்தும் விதமாக, இரண்டு வாரங்களாக ஏரியின் மேற்பரப்பில் கருமை நிற எண்ணெய் படலம் கலந்து, ஏரி முழுதும் படர்ந்திருக்கிறது.
தாமரை ஏரியால், கும்மிடிப்பூண்டி நகரின் நிலத்தடி நீர் கடுமையாக பாதித்திருப்பதை உறுதி செய்யும் விதமாக, உலோகங்கள் அனைத்தும் கருத்து வருவது, மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
பல ஆண்டுகளுக்கு முன்பே, கும்மிடிப்பூண்டி நகரின் நிலத்தடி நீர் பருக தகுதியற்றது என்பதால், அருகே உள்ள தேர்வழி கிராமத்தில் இருந்து, குடிநீர் பிடித்து வந்து பயன்படுத்தி வருகின்றனர்.
குடிப்பதை தவிர்த்து, குளிக்க, துணி துவைக்க, பாத்திரம் கழுவ மட்டுமே நிலத்தடி நீரை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தங்கம், வெள்ளி, பித்தளை உள்ளிட்ட உலோகங்களால் செய்யப்பட்ட பாத்திரங்கள், அணிகலன்கள் கருத்து வருவதை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உலோகங்களை பாதிக்கும் நிலத்தடி நீர், குளிக்கும் போதும், பல் விளக்கும்போதும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்ற அச்சத்தில் உறைந்து போயிருக்கின்றனர்.
இந்த பிரச்னை, கும்மிடிப்பூண்டி நகருக்கு உட்பட்ட திருவள்ளூர் நகர், காட்டுக்கொல்லை தெரு, எம்.எஸ்.ஆர்., கார்டன், சாய் பாபா நகர், வி.எம்.தெரு., உள்ளிட்ட பகுதிகளிலும் பரவி வருகிறது.
தாமரை ஏரியை சுற்றியுள்ள 2 கி.மீ., சுற்றுவட்டார பகுதியின் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உடனே, இந்த பிரச்னைக்கு தீர்வு காண தவறினால், பகுதிமக்கள் ஆரோக்கியம் கேள்விக்குறியாகும் என, இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலோகங்கள் கருத்து வருவது ஒருபுறம் இருக்க, இந்த தண்ணீரை தான் குளிக்கவும், பல் விளக்கவும் பயன்படுத்தி வருகிறோம். இதனால் சரும நோய் உள்ளிட்ட உடல் உபாதைகள் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறோம். - ஆர்.செல்வி, 42, பகுதிவாசி, கும்மிடிப்பூண்டி.
கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் நகரில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு மூலமாக, பேரூராட்சி நிர்வாகம் தண்ணீர் வினியோகம் செய்து வருகிறது. இந்த தண்ணீரால் பித்தளை மற்றும் வெள்ளி பாத்திரங்கள் கருத்து வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளோம். பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் பயனில்லை. - எஸ்.நளினி, 30, பகுதிவாசி, கும்மிடிப்பூண்டி.

