மீஞ்சூர் ரயில்வே மேம்பாலப்பணி ஜவ்வு வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
மீஞ்சூர் ரயில்வே மேம்பாலப்பணி ஜவ்வு வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
ADDED : மார் 15, 2026 06:04 AM

மீஞ்சூர்:மீஞ்சூர் ரயில்வே மேம்பாலப்பணிகள் ஜவ்வாக நீடித்து வருவதால் வாகன ஓட்டிகள், வெயிலில் பரிதவிக்கின்றனர்.
மீஞ்சூர் - காட்டூர் நெடுஞ்சாலையில், 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கல்வி, மருத்துவம், தொழில் உள்ளிட்ட அத்யாவசிய தேவைகளுக்கு இங்குள்ள மக்கள் மீஞ்சூர் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
இவர்கள் மீஞ்சூர் -- நந்தியம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில்வேகேட்டை கடந்து பஜார் பகுதிக்கு வந்து செல்லவேண்டும். ரயில்வே கேட் மூடியிருக்கும் நேரங்களில் நீண்ட நேரம் காத்திருந்து தவிக்கின்றனர்.
மக்களின் காத்திருப்பு மற்றும் சிரமங்களை தவிர்க்க, 2019ல், மேம்பாலம் அமைக்கப்பட்டு, அதற்கான இணைப்பு சாலை பணி கடந்த 2024 பிப்ரவயில் துவங்கப்பட்டது.
சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின்கீழ், 67.95 கோடி ரூபாய் துவங்கப்பட்ட இப்பணிகள் கடந்த ஆண்டு, ஜூனில் பணி முடிந்து பயன்பாட்டிற்கு வந்திருக்க வேண்டும்.
கால அவகாசம் முடிந்து, ஒன்பது மாதங்கள் ஆகும் நிலையில், பாலத்தின் இணைப்பு சாலைக்கான பணிகள் முழுமை பெறாமல் உள்ளன.
இரண்டு ஆண்டுகளாக ஜவ்வாக நீடித்து இணைப்பு சாலை பணிகளால், ரயில்வே கேட் பகுதியில் மக்கள் காத்திருப்பதும் தொடர்கிறது.
கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. ரயில்வே கேட் பகுதியில் நீண்டநேரம் காத்திருக்கும் மக்கள் மிகவும் சோர்வடைகின்றனர்.
இணைப்பு சாலை பணிகளில் துரிதமாக மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரப்படுத்தாமல் அலட்சியம் காட்டி வருவதால், 60 கிராமங்களை சேர்ந்த மக்கள் அதிருப்தியில் உள்ளனர். சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில், மக்களின் அதிருப்தி தேர்தலின் போது தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறி உள்ளனர்.
