/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கொசு ஒழிப்பு பணிகள் முடக்கம் கும்மிடியில் பரவும் மர்ம காய்ச்சல் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம்
/
கொசு ஒழிப்பு பணிகள் முடக்கம் கும்மிடியில் பரவும் மர்ம காய்ச்சல் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம்
கொசு ஒழிப்பு பணிகள் முடக்கம் கும்மிடியில் பரவும் மர்ம காய்ச்சல் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம்
கொசு ஒழிப்பு பணிகள் முடக்கம் கும்மிடியில் பரவும் மர்ம காய்ச்சல் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம்
ADDED : அக் 14, 2025 12:14 AM
கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி பேரூராட்சி யில், கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் ஒன்று மட்டுமே உள்ள நிலையில், அதுவும் சரியாக இயங்காததால், கொசு ஒழிப்பு பணிகள் முடங்கி, மர்ம காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதாக. அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில், 25,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அவற்றில் பெரும்பாலான வார்டுகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி, குப்பை குவிந்துள்ளன. அதில் உற்பத்தியாகும் கொசுக்களால், மக்களின் சுகாதாரம் பாதித்து, ஏராளமானோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் மட்டும், தினமும் 350க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வருகின்றனர். தனியார் மருத்துவமனையில், காய்ச்சலால் குவியும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், கும்மிடிப்பூண்டியில் கொசு ஒழிப்பு பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகத்திடம், ஒரு கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் மட்டுமே உள்ளது. அதுவும், தொடர்ந்து 30 நிமிடங்களுக்கு மேல் அடித்தால், சூடாகி செயலிழந்து விடுகிறது.
அந்த ஒரு இயந்திரத்தை வைத்து, பேரூராட்சி முழுதும் கொசு மருந்து அடிக்க முடியாத சூழலில், புதிதாக ஐந்து இயந்திரங்கள் வாங்க வேண்டும் என, இரண்டு ஆண்டுகளாக கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், தற்போது வரை பேரூராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர். பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால், கும்மிடிப்பூண்டி பகுதியில், மர்ம காய்ச்சல் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் தாமதிக்காமல், உடனே ஐந்து இயந்திரங்களை வாங்கி, கொசு ஒழிப்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.