/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தார்ப்பாய் மூடாமல் செல்லும் மண் லாரிகளால் விபத்துகளில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
தார்ப்பாய் மூடாமல் செல்லும் மண் லாரிகளால் விபத்துகளில் சிக்கும் வாகன ஓட்டிகள்
தார்ப்பாய் மூடாமல் செல்லும் மண் லாரிகளால் விபத்துகளில் சிக்கும் வாகன ஓட்டிகள்
தார்ப்பாய் மூடாமல் செல்லும் மண் லாரிகளால் விபத்துகளில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : ஜன 19, 2025 02:29 AM

திருத்தணி:சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருவள்ளூரில் இருந்து, கனகம்மாசத்திரம், திருத்தணி, பொன்பாடி சோதனைச்சாவடி வரை இருவழிச் சாலை, நான்குவழிச் சாலையாக மாற்றப்பட உள்ளன. இதற்காக சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றி சாலை விரிவாக்கம் பணிகள் நடந்து வருகின்றன.
இதில், கனகம்மாசத்திரம் முதல், திருத்தணி பொன்பாடி வரை நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்கு, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பட்டாபிராமபுரம், காசிநாதபுரம் ஏரிகளில் மண் எடுப்படுதற்கு, மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று மண் எடுக்கப்படுகிறது.
இதற்கான இரண்டு ஜே.சி.பி., இயந்திரங்கள் வாயிலாக ஏரியில் மண் எடுத்து, 10க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் மூலம் நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு மண் கொட்டப்பட்டு வருகிறது.
லாரிகளில் மண் கொண்டு செல்லும் போது, தார்ப்பாய் போட்டு மூடி எடுத்து செல்லாததால், களிமண் கட்டிகள் லாரியில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் விழுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையில் கொட்டும் மண் கட்டிகளால் அடிக்கடி தவறி விழுந்து காயங்களுடன் சென்று வருகின்றனர். லாரிகள் தார்ப்பாய் மூடாமல் செல்வதால், மண்கட்டிகள் சாலையில் விழுகின்றன.
உதாரணமாக நேற்று, திருத்தணி பட்டாபிராமபுரம் பேருந்து நிறுத்தம் மற்றும் புதிய புறவழிச்சாலை ஆகிய பகுதிகளில் மண்கட்டிகள் சாலையில் விழுந்து இருந்தால், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை, மகள் சாலையில் தவறி விழுந்து கால் மற்றும் கைகளில் படுகாயம் அடைந்தனர்.
இதுபோன்ற சம்பவங்கள் அதிகளவில் நடக்கிறது. தார்ப்பாய் மூடாமல் செல்லும் லாரிகள் மீது போலீசார் மற்றும் வருவாய் துறையினர் நடவடிக்கை எடுத்து அபராதம் விதிப்பதுடன், வாகனங்கள் பறிமுதல் செய்ய வேண்டும். ஆனால், அதிகாரிகள் கண்டும், காணாமல் உள்ளனர்.
எனவே, திருவள்ளூர் கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து, தார்ப்பாய் மூடாமல் மண் எடுத்து செல்லும் லாரிகள் குறித்து கண்காணித்து எச்சரிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

