தார்ப்பாய் மூடாத மண் லாரிகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
தார்ப்பாய் மூடாத மண் லாரிகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : செப் 25, 2026 05:42 PM
திருவாலங்காடு, செப். 26–
திருவாலங்காடு சுற்றுப்பகுதிகளில், தார்ப்பாய் மூடாமல் செல்லும் மண் லாரிகளால், அப்பகுதி வாகன ஓட்டிகள் விபத்து அபாயத்தில் பயணித்து வருகின்றனர்.
திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டது தொழுதாவூர், சின்னம்மாபேட்டை, மணவூர் கிராமங்கள். இப்பகுதிகளுக்கு, அரக்கோணம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, சவுடு மண் லாரிகள், திருவாலங்காடு வழியாக சென்று வருகின்றன.
இதில், பல லாரிகள் தார்ப்பாய் மூடாமலும், அதிக அளவு பாரம் ஏற்றியும் இயக்கப்படுகின்றன. இதனால், சாலைகளில் மண் புழுதி பரவி, வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கின்றன.
அதனால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர். மேலும், லாரியில் இருந்து சாலையில் மண் சிதறுவதால், நடந்து செல்வோர் மற்றும் வாகனங்களில் செல்வோரும் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே, தார்ப்பாய் மூடாமல், அளவுக்கு அதிகமாக மண் ஏற்றிச் செல்லும் லாரிகள் மீது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
