/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வர்ணம் பூசாத வேகத்தடை அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
வர்ணம் பூசாத வேகத்தடை அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : மார் 24, 2025 02:24 AM

ஊத்துக்கோட்டை,:சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், ஜனப்பன்சத்திரம் - ஊத்துக்கோட்டை இடையே மஞ்சங்காரணை, கன்னிகைப்பேர், பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், ஊத்துக்கோட்டை மற்றும் இணைப்பு சாலை வழியே, 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இச்சாலையில் தினமும், 20,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கின்றன. சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம், பிச்சாட்டூர், புத்துார், திருப்பதி, கடப்பா, கர்நுால், நந்தியால், ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள், ஊத்துக்கோட்டை வழியே செல்கின்றன.
இச்சாலையில் விபத்துகளை கட்டுப்படுத்த வேகத்தடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. துவக்கத்தில் இந்த வேகத்தடைக்கு வெள்ளை வர்ணம் பூசப்பட்டது. வாகன போக்குவரத்தால் வர்ணம் மறைந்தது. அதன்பின் வர்ணம் பூசப்படவில்லை.
இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், வேகத்தடை இருப்பது தெரியாமல் கீழே விழுகின்றன. ஊத்துக்கோட்டை ரெட்டி தெருவில், இரு நாட்களுக்கு முன் கர்ப்பிணி மனைவியை பைக்கில் ஏற்றிச் சென்றவர், வேகத்தடை இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில், இருவரும் பலத்த காயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். எனவே, கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, வேகத்தடைகளுக்கு வெள்ளை வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.