பராமரிப்பு இல்லாத பாலங்களால் திணறும் வாகன ஓட்டிகள்
பராமரிப்பு இல்லாத பாலங்களால் திணறும் வாகன ஓட்டிகள்
ADDED : ஜன 20, 2026 04:59 AM

மீஞ்சூர்: அத்திப்பட்டு சாலையில் உள்ள பாலங்கள் சேதம் அடைந்தும், செடிகள் வளர்ந்தும் பராமரிப்பு இல்லாமல் இருப்பது வாகன ஓட்டிகள் இடையே, விபத்து அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மீஞ்சூர் அடுத்த வல்லுார் சாலை சந்திப்பில் இருந்து, அத்திப்பட்டு, அத்திப்பட்டு புதுநகர் வழியாக வடசென்னை அனல்மின்நிலையம் செல்லும் சாலையில், 40ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் மற்றும் கால்வாயின் குறுக்கே உள்ள இரண்டு பாலங்கள் பராமரிப்பு இல்லாமல் உள்ளன.
பாலங்களின் பக்கவாட்டு தடுப்பு சுவர்கள் சேதம் அடைந்தும், செடிகள் வளர்ந்தும் உள்ளன. இதனால் உறுதிதன்மை கேள்விக்குறியாகி வருகிறது.
காட்டுப்பள்ளியில் உள்ள துறைமுகம், வடசென்னை அனல்மின்நிலையம், பெட்ரோலிய நிறுவனங்கள், எரிவாயு முனையங்கள், நிலக்கரி கிடங்கு என பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு தினமும் நுாற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் இந்த பாலங்களை கடக்கின்றன.
வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்துடன் செல்கின்றனர். எனவே, பாலங்களை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
