ADDED : ஜன 16, 2025 08:19 PM
பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை நகரின் மேற்கில் அமைந்துள்ளது ஆறுமுக சுவாமி மலைக்கோவில். மலையடிவாரத்திலும், மலைஉச்சியிலும் விநாயகர் மற்றும் ஆறுமுக சுவாமி சன்னிதிகள் அமைந்துள்ளன.
காணும் பொங்கல் திருநாளில் இந்த மலைக்கோவிலுக்கு கிராமத்தினர் குடும்பத்தினருடன் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். காணும் பொங்கல் திருவிழாவின் போது இந்த மலை முழுதும் பக்தர்கள், நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் கூடி பேசி அன்பை பரிமாறிக் கொாள்வது உண்டு.
இதற்காக, வெளியூர்களில் வசிப்பவர்களும் சொந்த கிராமத்திற்கு வந்திருந்து இந்த விழாவில் பங்கேற்கின்றனர்.
காணும் பொங்கல் தினமான நேற்று, 85ம் ஆண்டாக, மலைசுற்று திருவிழா நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மலைக்கோவிலின் பின்பகுதியில் உள்ள சமவெளியில் பக்தர்கள் இயற்கையை ரசித்தபடி, காணும் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.
மாலை 6:00 மணியளவில், விநாயகர், ஆறுமுகசுவாமி, அகத்தீஸ்வரர் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகள் பார்வேட்டை உற்சவத்தில் எழுந்தருளினர்.